சென்னை: சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், பல மாதங்கள் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்களும், சில மாதங்கள் 40 சதவீதத்துக்கு மேற்பட்ட இடங்களும் நிரம்பாமல் இயக்கப்பட்டுள்ளன. இத்தகவல், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெறப்பட்ட விவரத்தில் தெரியவந்துள்ளது.
தேஜஸ் சொகுசு ரயில்
அதிவேகம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரயிலான தேஜஸ் ரயிலின் சேவை சென்னை – மதுரை இடையே 2019-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு நண்பகல் 12.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு சென்னை வந்தடைகிறது. திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும். ஆறரை மணி நேரத்தில் சென்றடைவதால், பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
இந்த ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் ரயில்வே வாரியம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், தேஜஸ் ரயிலில் பல மாதங்களாக 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் காலியாக இயக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் என்பவர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், தேஜஸ் ரயிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு ஏப்ரல் வரை (கரோனா ஊரடங்கு காலம் தவிர) மாதந்தோறும் எவ்வளவு இடங்கள் நிரம்பின என்பது உள்ளிட்ட பல கேள்விகளைக் கேட்டிருந்தார்.
அதன்படி தகவல் உரிமை சட்டத்தின்கீழ் கிடைத்த விவரத்தில் கூறியிருப்பதாவது:
அதிகபட்சமாக 50.6 சதவீதம்
தேஜஸ் ரயிலின் எக்ஸிக்யூட்டி சேர் காரில் 56 இடங்களும், ஏசி சேர் காரில் 856 இடங்களும் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச்சில் எக்ஸிக்யூட்டி சேர் காரில் 22.69 சதவீதம் இடங்களும், ஏசி சேர் காரில் 41.86 சதவீதம் இடங்களும் காலியாக இயக்கப்பட்டது தெரியவந்தது. 2019-ம் ஆண்டு அக்டோபரில் எக்ஸிக்யூட்டி சேர் காரில் 29.4 சதவீதம் இடங்களும், 2020 மார்ச்சில் 42.26 சதவீதம் இடங்களும், 2021 ஜனவரியில் 50.6 சதவீதம் இடங்களும், 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் 20.76 சதவீதம் இடங்களும், ஏப்ரலில் 5.63 சதவீதம் இடங்களும் நிரம்பாமல் காலியாக இருந்துள்ளன.
அதேபோல், ஏசி சேர் காரில் 2019 அக்டோபரில் 35.5 சதவீதம் இடங்களும், டிசம்பரில் 21.77 சதவீதம் இடங்களும், 2020 மார்ச்சில் 45.87 சதவீதம் இடங்களும், 2021 ஜனவரியில் 39.69 சதவீதம் இடங்களும், 2022 பிப்ரவரியில் 20.7 சதவீதம் இடங்களும் நிரம்பாமல் காலியாக இருந்தது தெரியவந்துள்ளது.
மறுமார்க்கமாக, சென்னைக்கு இயக்கப்பட்ட தேஜஸ் ரயிலில் பல மாதமாக இடங்கள் நிரம்பாமல் இருந்துள்ளது. இதன்மூலம், ரயில்வேக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, வருவாய் இழப்பை தவிர்ப்பதோடு, தாம்பரம் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் ரயிலை நிறுத்த ரயில்வே வாரியத்துக்கு 2019 – 2020 காலகட்டத்தில் 6 முறை பரிந்துரைக் கடிதங்களை அதிகாரிகள் அனுப்பினர். அதற்கு ரயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதும் தகவல் உரிமைச்சட்டத்தில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தகவல் உரிமைச் சட்டம் மூலம் விவரம் பெற்ற, பொறியாளர் தயானந்த கிருஷ்ணன் கூறும்போது, ‘‘தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்த மக்களின் சொந்த ஊர் பயணத்துக்கு தேஜஸ் ரயில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். எனவே, தேஜஸ் ரயிலை தாம்பரத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ என்றார்.
வாரியம் முடிவு எடுக்கும்
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தாம்பரத்தில் தேஜஸ் ரயிலை நிறுத்துவது தொடர்பாக ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக ரயில்வே வாரியம் முடிவு எடுக்கும்’’ என்றார்.