கீவ்: ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் தேவை என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 100 நாட்களுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடக்கிறது. தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள சீவிரோடோநெட்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆற்றிய உரையில் கூறியதாவது:
ரஷ்யாவின் ஏவுகணைகள், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சீவிரோடோநெட்ஸ்க் நகரில் கடைசி பாலத்தையும், ரஷ்ய படைகள் தகர்த்தபின், அங்குள்ள மக்களை உக்ரைன் ராணுவம் அப்புறப்படுத்தி வருகிறது. தற்போது டான்பாஸ் நகரை கைப்பற்ற ரஷ்யா விரும்புகிறது.
உக்ரைனுக்கு நவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் தேவை. இவற்றை வழங்குவதில் நட்பு நாடுகள் தாமதிப்பதில் நியாயமில்லை. சில ரஷ்ய ஏவுகணைகள், தடுப்பு கருவிகளில் இருந்து தப்பித்து உக்ரைனில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சீவிரோடோநெட்ஸ்க் மற்றும் சுற்றுப்புற நகரங்களில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படையினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த பாதிப்புகள் வேதனையாக உள்ளன.
டான்பாஸ் பகுதியில் நாங்கள் வலுவான நிலையில் உள்ளோம். ரஷ்ய படையினருக்கும் அதிக இழப்புகள் ஏற்படுகின்றன. கீவ் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கார்கீவ் பகுதியிலும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போர் தொடர்வதால், நாங்கள் தொடர்ந்து தீவிரமாக போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.