சென்னை: விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்ததற்கும், போலீஸாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பிரேதப்பரிசோதனை அறிக்கையை சுட்டிக்காட்டி கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்த செங்குன்றம், அலமாதியைச் சேர்ந்த குற்றப்பின்னணி கொண்டவர் ராஜசேகர் என்ற அப்பு (33). இவர் கடந்த12-ம் தேதி போலீஸ் விசாரணையின்போது மர்மமான முறையில்மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக ராஜசேகர் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் உள்ளிட்ட 5 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: சரித்திர பதிவேடு குற்றவாளியான ராஜசேகர் மீது 27 குற்ற வழக்குகள் உள்ளன. திருட்டு வழக்கு தொடர்பாக விசாரிக்க சம்பவத்தன்று காலை 8 மணிக்கு ராஜசேகரை போலீஸார் அழைத்து வந்துள்ளனர்.
பின்னர், 11 மணியளவில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, அருகில் உள்ள தனியார்மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால், புறக்காவல் நிலையத்தில் ஓய்வெடுக்க தங்கவைக்கப்பட்டார். பின்னர், மாலையில் உடல்நிலை மேலும் மோசமானதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்துள்ளார்.
நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. உடற்கூறாய்வின் முதற்கட்ட தகவலில் ராஜசேகர் உடலில், 4 இடங்களில் காயங்கள் உள்ளன. அதில், ஒரு காயம் 5 நாட்கள் முன்பும், ஒரு காயம் 18 அல்லது 25 மணி நேரத்துக்கு முன்பும், ஒரு காயம் 24 மணி நேர இடைவெளியில் நடந்திருக்கலாம் எனவும், டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த காயங்கள் கை, கால்களில் இருப்பதால், காயத்தால் அவர்இறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. எதனால் இறந்தார் எனமுழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும்.
எனவே, ராஜசேகரை போலீஸார் தாக்கவில்லை என்பது தெரியவருகிறது. அதே நேரத்தில் அஜாக்கிரதையாக இருந்ததால் போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரிக்க தொடங்கியுள்ளனர் என்றார்.
இதற்கிடையில் விசாரணைக் கைதிகளை விசாரிக்கும் முறைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.