திருவள்ளூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அதிமுக இரண்டாக பிரிந்தது. இதையடுத்து ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்த நிலையில் அதிமுக தற்போது வரை இரட்டை தலைமையுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அதிமுகவிற்கு மீண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவின் ஒற்றைத் தலைமையை ஏற்பது இபிஎஸ்ஸா ஓபிஎஸ்ஸா என அவரது ஆதரவாளர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் இரவோடு இரவாக இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் எம்.எல்.ஏ.மணிமாறன் ஆகியோரது படங்களுடன் ‘தலைவா வா தலைமையேற்க வா’ ‘ஒற்றைத் தலைமை ஒன்றே தீர்வு’ ‘1.5 கோடி தொண்டர்களின் ஒரே விருப்பம் எடப்பாடியார், ஐ சப்போர்ட் இபிஎஸ்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
fகடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பதவிஏற்க வரும்போது, ‘தம்பி வா.. தலைமையேற்க வா…’ என மு.க.ஸ்டாலினை துரைமுருகன் அழைப்பார். இந்நிலையில், விரைவில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடவுள்ள நிலையில், திமுக ஸ்டைலில் ‘தலைவா வா.. தலைமையேற்க வா’ என இபிஎஸ்க்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM