நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ஹைதராபாத்தில் பேரணி நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதேபோல, டெல்லி பாஜக நிர்வாகியான அனில் ஜிண்டால் என்பவரும் நபிகள் குறித்து அவதூறாக ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். இது, இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில், வளைகுடா நாடுகள் இந்தியாவை கண்டிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது. இதையடுத்து, நுபுர் சர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அனில் ஜிண்டால் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நுபுர் சர்மா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பாஜகவில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பாஜகவினர் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். பின்னர் கட்சியின் எச்சரிக்கையை அடுத்து இந்த விவகாரம் குறித்து பாஜகவினர் யாரும் பேசுவதில்லை.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். அவர்கள் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த மற்றொரு தர்ப்பினர் நுபுர் சர்மாவை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடனடியாக அங்கு வந்து இரு தரப்பையும் கலைந்து போக செய்தனர்.
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக அனுமதியின்றி பேரணி நடத்தியதாக சில அமைப்புகளின் நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். அசம்பாவிதங்களை தடுக்க அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM