திமுகவின் ஊழலை சுட்டிக் காட்டியதால் ஒர் ஆண்டில் தன் மீது 625 கோடி ரூபாய் அளவிற்கு மான நஷ்ட ஈடு வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், எத்தனை வழக்கு போட்டாலும் பேசுவதை பேசிக்கொண்டே இருப்பேன் என்றும் மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
மதுரை பழங்காநத்ததில் மதுரை மாநகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அதில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுக ஆட்சியில் இருட்டு நிலவி வருகிறது. சினிமா மாடல் போல நடிப்பதே, திராவிட மாடல். முதல்வர் எதற்கெடுத்தாலும் நடித்து வருகிறார். காவல்நிலையத்தில் தீடீர் ஆய்வின் போது எப்படி ஆளுங்கட்சி கேமரா மட்டும் செல்கிறது என தெரியவில்லை. வருகின்ற காலம் பாஜகவின் காலம். 400 எம்பிக்களை பெற்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்பிக்கள் வெற்றி பெற்று செல்ல உள்ளனர்.
`பதுங்குவது பாய்வதற்கு’ என்று டயலாக் பேசியே 1967 ல் இருந்து கட்சி நடத்திக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் புதிதாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை என்ற சொல் தொடர்ந்து கேட்கும் நிலை உள்ளது. திமுக ஆட்சியில் குற்றவாளிகள் தைரியமாக வெளியில் வந்து குற்றங்களை செய்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமை, கட்டப்பஞ்சாயத்து கொலை கொள்ளை தொடர் கதையாகி உள்ளது. குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல் நிலையங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் கட்ட பஞ்சாயத்து செய்வதும் அதிகரித்து வருகிறது.
அதுமட்டுமன்றி திமுக-வின் அமைச்சர்கள் ஊழலிலும் ஈடுபடுகின்றனர். உதாரணத்துக்கு பணத்தை வாங்கி கொண்டு அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளை பணி மாற்றம் வழங்கி வருகிறார். இன்னொருபக்கம் அமைச்சர் பிடிஆர், அவரிடம் பேசினாலே உடனே அவர் நான் யார் தெரியுமா, என் தாத்தா யார் – என் முப்பாட்டானார் யார் தெரியுமா என பேசுகிறார். போலவே சோலார் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக மின்சாரத்துறை அமைச்சர் வாங்குகிறார்.
திமுகவினரின் ஊழல் பற்றி பேசியதற்காக மட்டும், என் மீது 625 கோடி ரூபாய்க்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். பிடிஆர் நிறுவனம், திமுக, திமுக எம்பி வில்சன், செந்தில் பாலாஜி என வழக்கு தொடர்ந்துள்ளனர். எத்தனை வழக்கு போட்டாலும் பேசுவதை பேசிக்கொண்டு தான் இருப்பேன். தட்டிக்கேட்பதை தட்டிக்கேட்க தான் செய்வேன். சேகர் பாபு என்றைக்கு ஆதீனத்தை தவறாக பேச ஆரம்பித்தாரோ அன்றைக்கு கதை காலியாக போகிறது என்று அர்த்தமாகிவிட்டது.
ஆர்எஸ்.பாரதி, என் ஜாதக கட்டம் குறித்தெல்லாம் பேசுகிறார். கடவுள் நம்பிக்கையற்ற திமுக அமைச்சர்களுக்கு கடவுள் மீது, ஜாதகம் மீது என்ன தீடீர் அக்கறை?`கோயில் பணம் மீது திமுகவுக்கு கண். சாமிக்கு பின்வரும் உண்டியல் மீது திமுகவுக்கு கண்’ என மதுரை ஆதீனம் பேசியதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் ஆதீனத்தை மட்டும் தொட்டுப்பாருங்கள். மதுரை மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பாருங்கள். பாஜக செய்வதை இரண்டாவதாக பாருங்கள். பிரதமர் மோடி செய்வதையும் மூன்றாவதாக பாருங்கள். ஆதீனம், சன்னியாசி, முனிவர்களை பற்றி திமுக அரசு தவறாக பேசி வருகிறது.
மிரட்டும் மழையிலும், விரட்டும் காற்றிலும், அசையாத ஆர்வத்துடன், அளவு குறையாது கூடிய அன்பர்கள் கூட்டம் நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் மேல் மதுரை மக்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு. (3/4) pic.twitter.com/dgJzuOYmRw
— K.Annamalai (@annamalai_k) June 15, 2022
மதுரை ஆதீனம் என்ன தவறாக பேசி விட்டார்? தமிழக அரசு ஆதீனத்தை தொட்டு பாருங்கள் பார்ப்போம்… மதுரை ஆதீனத்தை மிரட்டி அடி பணிய வைக்க திமுக நினைக்கிறது. ஆதீனத்துக்கும், பாஜகவும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்கள் பக்கம் ஆதீனம் இருப்பதால் நாங்கள் ஆதரவு தருகிறோம்” என பேசினார்.
– செய்தியாளர்: மணிகண்டபிரபுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM