“When we sigh about our troubles, It doubles everyday. When we laugh about our troubles, It is bubble blown away. Let these words of love soothe your woeful eyelid, But not your aching heart. Mummy rests in peace to see her darling kid, To rise to sky in Maternal art.
“என் அன்னை இறந்ததையொட்டி எனக்கு வந்த ஆயிரக்கணக்கான அனுதாபக் கடிதங்களில் எனக்கு மிகவும் ஆறுதல் அளித்த கடிதம் இதுதான். ஆம், என் அன்னை, நான் என்னென்ன செய்யப்போகிறேன், எப்படி இருக்கப்போகிறேன், எவ்வாறு என் அன்னை கவனித்து வந்த காரியங்களைக் கவனிக்கப்போகிறேன் என்று என்னைப் பார்த்துக் கொண்டு தானிருப்பார். அவரது எண்ணப்படி நான் வளருகிறேனா என்பதையும் கவனித்துக் கொண்டுதானிருப்பார். அவர் ஆசையாக, அன்புடன் வளர்த்த பெண்ணாயிற்றே நான்.
என் அன்னையில்லாமல் நான் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி சென்னை சினிமா ரசிகர்கள் நடத்திய பரிசளிப்பு விழாதான். எந்தப் பொது நிகழ்ச்சிக்கும் கலந்து கொள்வதற்குப் புறப்பட எண்ணும் நான், எந்தப் புடவையைக்கட்டிக் கொள்ளலாம் என்று பீரோவிலுள்ள அத்தனை புடவைகளையும் என் முன் வைத்துக் கொண்டு பரிதவிப்பேன்.
“அம்மு, ஏன் இப்படி உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? இந்த ஒரு சிறு காரியத்தில் கூடக்கவனம் செலுத்த முடியாத நீ, எப்படித்தான் பெரிய காரியங்களைக் கவனிக்கப் போகிறாயோ? சரி, சரி, நேரமாகிறது, இந்தப் புடவையைக் கட்டிக்கொண்டு புறப்படு” என்று என்னிடம் ஒரு புடவையை எடுத்துக் கொடுப்பார். அதைக் கட்டிக் கொண்டு தயாராகிவிடுவேன். ஆக, ஒரு சிறிய புடவையை தேர்ந்தெடுப்பதிலேயே என் அன்னை உதவி தேவைப்படும்
எனக்கு, மற்ற விஷயங்களைப் பற்றி நான் என்ன சொல்வது? எங்கள் வீட்டில் எந்த விஷயத்திலும் என் அன்னையின் முடிவு தான் கடைசி முடிவு. சென்னை சினிமா ரசிகர்கள் பரிசளிப்பு விழாவிற்குப் புறப்படுவதற்கு முன் நான் என்ன செய்தேன் தெரியுமா? புடவைகளையெல்லாம் என் அன்னையின் புகைப்படத்தின் முன் வைத்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டு, அன்னையை நினைத்துக் கொண்டு ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதைத்தான் கட்டிக் கொண்டு விழாவிற்குக் கிளம்பினேன்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது காலையில் எழுந்தவுடன், அம்மாவின் அறைக்குச் சென்று, அவரது கட்டிலில் படுத்துக்கொண்டு, “அம்மா! இன்றைக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போகத்தான் வேண்டுமா? நாளைக்குப் போகிறேனே” என்று கூறுவேன். அம்மா என்னைச் சமாதானப்படுத்தி என்னைப் பள்ளிக்கு அனுப்பத்தயார் செய்வார். அதே போல் தான் இன்றும்.
ஏதாவது ஒருநாள் காலையில் எழுந்தவுடன் அம்மாவைப் பார்த்து, “இன்னிக்கு ஷூட்டிங்கிற்குப் போகத்தான் வேண்டுமா, ஒரு மாதிரியாக இருக்கிறது. ஷூட்டிங்கை ரத்து செய்யச் சொல்லிவிடேன்” என்பேன். அதற்கு, “ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவழித்துச் செட்டைப் போட்டு விட்டு, உன்னிடமும், மற்றவர்களிடமும் கால்ஷீட் வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளருக்கு ஷூட்டிங் கேன்சல் என்றால் எப்படியிருக்கும்? உன் சிறு வயதுப் பழக்கம் அப்படியே தான் இன்னும் இருக்கிறது” என்று சொல்வி என்னை ஷூட்டிங்கிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கூப்பிடுவேன். அதற்குள் அம்மாவிற்குப் பல வேலைகள் வந்துவிடும். சில சமயம் மேக்-அப் அறையிலிருந்து கூப்பிடுவேன். ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அம்மாவிடம் மானேஜர் ஏதாவது கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். ஆடிட்டர் அல்லது வக்கீல் வீட்டிலிருந்து போன் வரும். வீட்டிலுள்ளவர்கள் ஏதாவது கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். எனக்குக் கோபம் வந்துவிடும். ‘நான் ஸ்டூடியோவிற்குப் போகும் வரையிலாவது என்னுடன் இரு’ என்று சத்தம் போடுவேன். உடனே மேக்-அப் அறையிலுள்ள சோபாவில் உட்கார்ந்து கொண்டு விடுவார். கண்ணாடியில் அவரது முகம் தெரியும். பேசிக் கொண்டே மேக்-அப் போட்டுக் கொள்வேன். திருத்தங்கள் ஏதேனுமிருப்பின் சொல்வார். மேக்-அப் முடிந்து டிரஸ் செய்து கொண்டதும் அம்மா முன் நிற்பேன். “சரியாக இருக்கிறது” என்று கூறிய பிறகுதான் கிளம்புவேன். சில சமயங்களில் நான் கிளம்பும்போது, குளித்துக் கொண்டிருப்பார். கதவைத் தட்டியதும், முகத்தை வெளியில் நீட்டி, என்னைப் பார்த்துவிட்டு, “கரெக்டாக இருக்கிறது” என்று சொல்லுவார்.
ஆனால், இன்று மேக்-அப், டிரஸ் எல்லாம் முடித்துக்கொண்டதும், என் அறையிலுள்ள என் அன்னையின் புகைப்படத்தின் முன் நின்று மானசீகமாக “நன்றாக இருக்கிறதா அம்மா?” என்று கேட்டுவிட்டுத் தான் ஸ்டுடியோவிற்குக் கிளம்புகிறேன்.
சாப்பாட்டிற்கு நான் ஸ்டூடியோவிலிருந்து திரும்பி வரும்பொழுதே கீழேயுள்ளவர்களிடம், “அம்மா மேலே இருக்கிறாரா?” என்று கேட்டுக் கொண்டு தான் மேலே அறைக்குச் செல்லுவேன். அதே போலத்தான் மாலையில் திரும்பும் பொழுதும். சில சமயங்களில் மாலை வேளையில் அம்மா எங்காவது வெளியே சென்றிருந்தால், அவர் வரும் வரை ஹாலிலேயே உட்கார்ந்து கொண்டிருப்பேன்.
இதனால் என் அம்மா எங்கும் வெளியே செல்வதில்லை. அப்படி வெளியே சென்றாலும், நான் வரும் பொழுது வீட்டிலிருக்கத் தவறமாட்டார். தோட்டத்தைப் பார்வையிடவோ, புதிதாகக் கட்டிக் கொண்டிருக்கும் பங்களாவைப் பார்ப்பதற்கோ, கடைக்கோ அல்லது அவரது சிநேகிதி வீட்டிற்கோ சென்றாலும், நான் வரும் நேரத்தைத் தெரிந்து கொண்டு சீக்கிரமே வீட்டிற்கு வந்து விடுவார். என் அம்மாவின் சிநேகிதிகள் சிலர் என்னிடம், “உன் அம்மா என் வீட்டிற்கு வருகிறார். வந்தவுடனேயே, ‘அம்மு வந்துடுவா, சீக்கிரமே போகணும்.’ – இதையே தான் சொல்லிக் கொண்டிருப்பார். நன்றாக இருக்கிறது” என்று கோபித்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு நேரங்களில் என் அம்மா பெரும்பாலும் தூங்குவதில்லை. ஆனால், சாப்பாட்டிற்கு நான் வரும்போது எனக்காக ஹாலிலேயோ மாடி அறையிலேயோ உட்கார்த்து கொண்டிருப்பார். நான், “ஏம்மா, மத்தியானமாவது தூங்கக்கூடாதா?” என்று கேட்டால், “நீ ஸ்டூடியோவிற்குப் போன பிறகு தூங்குகிறேன்” என்று சொல்லுவார். என் அன்னை இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன் அவரது நெருங்கிய சிநேகிதியான, திருமதி ராஜம் கிருஷ்ணனைப் பார்க்கச் சென்றிருந்தாராம். நெடுநாள் கழித்து, அவர்களைப் பார்க்கப்போனதால், “சாப்பிட்டு விட்டுப் போகலாமே” என்று வற்புறுத்தியும் கூட, “இரவு எட்டு மணிக்கெல்லாம் அம்மு ஷூட்டிங்லேந்து வந்துவிடும். நான் போகிறேன். இன்னொருமுறை வந்து சாப்பிடுகிறேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பிவிட்டாராம். இதைத் திருமதி கிருஷ்ணன், என் அன்னை இறந்த பிறகு என்னைப் பார்க்க வந்த போது சொன்னதும், நான் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதேவிட்டேன்.
என் அம்மாவும், சித்தியும் கடைகளுக்குச் சென்றால், நல்லது ஏதாவதைப் பார்த்து விட்டால், “இது அம்முக்குப் பிடிக்குமில்லே. வாங்கிக்கலாம்” என்பாராம். அதே மாதிரி புடவைக் கடைகளுக்குச் சென்றாலும் எதைப் பார்த்தாலும், “இது அம்முவிற்குக் கரெக்டா இருக்கும்” என்று சொல்லி வாங்கிக்கொண்டு வந்துவிடுவார். எங்கு சென்றாலும் அவருக்காக எதுவும் வாங்கிக் கொள்ளமாட்டார்.
“நீ ஏம்மா ஒன்றுமே வாங்கிக்கிறதில்லை”-யென்று கோபித்துக் கொண்டால், “எனக்கெதற்கு, வயசாயிடுத்து, நீ நல்லாயிருந்தா அதுவேபோதும்” என்பார். வெளியூர் சென்றால் என் அம்மா எனக்காக ஏதாவது வாங்கி வராமல் இருக்க மாட்டார். என் அம்மா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன், ஹைதராபாத்திலுள்ள திராட்சைத் தோட்டத்தைப் பார்ப்பதற்காக, ஒரு நாளில் திரும்பிவிடுவதாக என்னிடம் சொல்லிவிட்டு, முதல் நாள் மாலை புறப்பட்டுச் சென்றார். அன்று இரவே அம்மாவுடன் பேசினேன். காலையில் பேசினேன். பகல் சாப்பாட்டின் பொழுதும் போன் செய்தேன்.
“எப்பம்மா வருவே, சீக்கிரமே வா, வரும்பொழுது ஏதாவது வாங்கிக் கொண்டு வா” என்று கூறினேன். என் சித்தி, பாட்டி எல்லோருமே அப்பொழுது, “சின்னக் குழந்தே நீ, அம்மா கிட்டே வரும் பொழுது ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று சொல்லிவிட்டாயா” என்று கேலி செய்தார்கள். எப்பொழுதும் போல ஹைதராபாத்திலிருந்து, அங்கு எனக்குப் பிடித்த கடையிலிருந்து கேக் வாங்கிக் கொண்டு வந்தார், இம்முறையும்.
இனி யாரை நான் கேட்கப் போகிறேன்? யார் அவ்வளவு அன்புடன் எனக்கு வாங்கித் தரப்போகிறார்கள்.
சிறு வயதிலிருந்து ஒரே விஷயத்தில் மட்டும் என் அம்மா மிகவும் கடுமையாக இருந்தார். அது நான் பரத நாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். ஆரம்ப காலத்தில் நான், நடன ஆசிரியரை வாசலில் பார்த்ததுமே, அம்மாவின் அறைக்கு ஒடிச் சென்று, “அம்மா, எனக்கு வயிறு வலிக்கிறது, தலை வலிக்கிறது” என்று எதையாவது சாக்குச் சொல்லி வாத்தியாரைத் திருப்பி அனுப்பிவிடுவேன். சில நாட்களுக்குப் பிறகு நான் ஏமாற்றுகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டதும், நடன ஆசிரியர் வந்ததும், நான் அவரது அறைக்குச் சென்றால், “உடம்புக்கு என்னவானாலும் சரி, கற்றுக்கொள்.
பிறகு டாக்டரிடம் அழைத்துச் செல்கிறேன்” என்று கண்டிப்பாகச் சொல்லி என்னை நடனப்பயிற்சிக்கு அனுப்பிவிடுவார். அன்று எவ்வளவு கண்டிப்புடன் எனக்குப் பரத நாட்டியம் கற்றுக் கொடுத்தது, அது இன்று என் திரையுலக வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படுகிறது தெரியுமா? என் ஒவ்வொரு நடன நிகழ்ச்சியின் பொழுதும் முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு நடனத்தை உன்னிப்பாகக் கவனிப்பார். இனி?……
என் நடிப்பையோ, நடனத்தையோ பத்திரிகையாளர்களோ, நண்பர்களோ, என் விசிறிகளோ எவ்வளவு பாராட்டினாலும் என் அம்மா சொன்னால்தான் எனக்குத் திருப்தி. ஆனால் சுலபத்தில் என் அம்மாவிடமிருந்து எனக்குப் பாராட்டுக் கிடைக்காது.
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்பது போல எப்பொழுதாவது என்னைத் தட்டிக்கொடுத்து “Very Good” என்பார். அப்பொழுது எனக்கு ஆஸ்கர் பரிசே கிடைத்தது போல மகிழ்ச்சியடைவேன். “இவ்வளவு பேர்கள் என்னைப் புகழ்ந்தும் பாராட்டியும் எழுதும் பொழுது, நீ மட்டும் ஏன் அப்படி பாராட்டுவதில்லை” என்று கேட்டால், “மற்றவர்கள் உன் திறமையைப் பாராட்டுவதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்குமேலும் நீ செய்ய வேண்டும் என்பதுதான் என் ஆசை. நீ பிரமாதமாகச் செய்து விட்டாய் என்று நான் சொல்லி அத்துடன் நீ இருந்து விட்டால்…? அதற்காகவே நான் உன்னை அடிக்கடி பாராட்டுவதில்லை” என்பார். ஏரானமான படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அம்மாவிடம் அதைப்பற்றிப்பேசுவேன். “அது சரி, இப்பொழுதுள்ள படங்களின் எண்ணிக்கைக்கே யாருக்குக் கால்ஷீட் கொடுப்பது, யாருக்குக் கொடுக்காமலிருப்பது? அனாவசியமான சண்டை வரும். இப்பொழுதே நீ ரெஸ்ட் இல்லையென்று சொல்கிறாய். அப்பொழுது என்ன சொல்வாயோ” என்று சொல்லுவார்.
மாதத்தில் எப்படியும் எனக்கு ஒரு நாள், அரை நாள் ஒய்வாக இருக்கும்படியே தயாரிப்பாளர்களுக்குக் கால்ஷீட் கொடுப்பார். அதே போலவே படத்தில் நடிப்பதற்கு முன் பல சமயங்களில் நானும், அம்மாவும் சேர்ந்தே கதையைக் கேட்போம். சில சமயங்களில் நான் ஸ்டூடியோவிலும், அம்மா, வீட்டிலும் கேட்பார்.
கடைசியில் இருவரும் உட்கார்ந்து யோசிப்போம். ஆனால், கடைசி முடிவு என் அம்மாவுடையது தானாகயிருக்கும். சில பத்திரிகைகள் என்னைப் பற்றித் தாக்கியும், கீழ்த்தரமாகவும் எழுதும் பொழுது, அதைப் பற்றி என் அம்மாவிடம் சொல்லி வருத்தப்படுவேன். அதற்கு, “பிரபலமான உன்னைப் பற்றி எழுதினால்தான் அவர்களது பத்திரிகை விற்பனையாகும். போகட்டும்” என்று ஆறுதல் கூறுவார்.
என் அன்னைதான் எனக்குக் குரு, சிநேகிதி, வழிகாட்டி எல்லாம்..!
(19.12.1971 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)