அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அந்தக் கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமையைத் தேர்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த ஒரு சில தினங்களாகவே அதிமுகவில் ஒற்றைத தலைமை பிரச்னை வலுத்து வருகிறது. இதன் காரணமாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அதிமுகவின் தலைமைக் கழகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் இன்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சி.வி.சண்முகம், வைகைச்செல்வன் வளர்மதி, செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே திடீர் பயணமாக எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றிருக்கிறார். அவரின் வீட்டின் முன்பு அவருடைய ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். மேலும் அவருக்கு ஆதரவாக போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருக்கிறது.
முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், `கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை… அது காலத்தின் கட்டாயம், அது குறித்துதான் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது!’ என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், “அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
இந்த சர்ச்சைகளுக்கு இடையே தற்போது ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் அதிமுக அலுவலகம் செல்ல இருக்கிறார். இதனால் அதிமுக-வில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கிறது!