வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்திற்கு பீஹாரில் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் போராட்டம் நடந்தது. அதில் சில இடங்களில் வன்முறையாக மாறியது. ஜார்க்கண்டிலும் போராட்டம் வெடித்துள்ளது.
ராணுவத்தில், ‘அக்னி வீரர்கள்’ என்ற புதிய வேலை உருவாக்கப்பட்டுள்ளது. ‘அக்னிபத்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த திட்டத்திற்கு பீஹாரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
பாபுவா சாலை ரயில் நிலையத்தில், இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினர். ஒரு பெட்டிக்கு தீவைத்தனர்.
அராஹ் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடந்தது. அங்கு வந்த போலீசார் மீது கற்களை வீசினர். இதனையடித்து கண்ணீர் புகைகுண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். தண்டவாளத்தில், ரயில் நிலையத்தில் இருந்த பொருட்களை வைத்து தீவைத்தனர். அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் அதனை அணைத்தனர்.
ஜெகனாபாத் என்ற இடத்தில் போராட்டத்தின் போது, பொது மக்கள் மீதும், போலீசார் மீதும் கற்களை வீசி தாக்கினர். போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் மாறி மாறி கற்களை வீசி கொண்டனர்.
நவாடா என்ற இடத்தில் சாலை மறியல் நடத்திய போராட்டக்காரர்கள், டயர்களை வைத்து எரித்தனர். புதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி கோஷம் போட்டனர். அங்குள்ள ரயில் நிலையத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள், ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியாக கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் அலுவலகத்தின் முன்பு இளைஞர்கள், ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
Advertisement