இந்துத்துவா குறித்து சிவசேனாவுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை – ஆதித்யா தாக்கரே ஆவேசம்

இந்துத்துவா குறித்து சிவசேனாவுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை என்று மகாராராஷ்டிரா அமைச்சரும், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில், ஆதித்யா தாக்கரே இன்று அங்கு சென்றார். அங்குள்ள சில கோயில்களுக்கு சென்று வழிபட்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அயோத்திக்கு நீங்கள் வந்தது அரசியல் காரணங்களுக்காகவா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து ஆதித்யா தாக்கரே கூறியதாவது:
image
ராமப்பிரானின் அருளையும், ஆசிர்வாதத்தையும் வாங்கவே நான் அயோத்தி வந்திருக்கிறேன். இதில் எந்த அரசியல் காரணங்களும் இல்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமரின் தரிசனத்தை காண்பதற்காக இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருவன். சிவசேனாவின் இந்துத்துவா மிகவும் தூய்மையானது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேர்தலில் ஜெயித்தாலும் தோற்றாலும் நாங்கள் எங்கள் கொள்கையில் இருந்து தவற மாட்டோம். இந்துத்துவா குறித்து சிவசேனாவுக்கு யாரும் பாடம் எடுக்க தேவையில்லை. அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு வந்த போது ‘முதலில் கோயில்; பின்னரே அரசாங்கம்’ என சிவசேனா முழங்கியது. அதன் பின்னரே, ராமர் கோயில் கட்டுவதற்கு தடைகள் விலகின. இவ்வாறு ஆதித்யா தாக்கரே கூறினார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகிக்கிறார். இதனிடையே காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் மதசார்பற்ற கட்சிகளாக இருப்பதால், சிவசேனா தனது இந்துத்துவா கொள்கையில் சமரசம் செய்து வருவதாக பாஜக, நவநிர்மான் சேனா போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்துத்துவா கொள்கையால் ஆட்சியை பிடித்துவிட்டு தற்போது அதனை கைவிடுவது சுயநலமான போக்கும் என்றும் அக்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.