கோத்தகிரி அருகே பெய்த கனமழையில் உருவான காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதன் காரணமாக விவசாயம் செய்யக்கூடிய விளை நிலங்கள்,சாலைகள் எங்கும் மழைநீர் தேங்கி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது.
அப்போது தீனட்டி பகுதியைச் சேர்ந்த ஹாலம்மாள் என்பவர் தேயிலை தோட்ட பணிக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தரைப்பாலம் மூழ்கும் அளவிற்கு அதிக அளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது ஹாலம்மாள் சாலை என்று நினைத்து சிறு ஓடையை தாண்டும்போது வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டார்.
இதையடுத்து இரவாகியும் ஹாலம்மாள் வீடு திரும்பாத நிலையில், அவரது மகன்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் உறவினர்களின் வீடுகளில் தேடியுள்ளனர், இந் நிலையில், இன்று காலை மீண்டும் தேடும்போது கூக்கல்தொரை அருகேயுள்ள மசகல் பகுதியில் ஆற்று ஓரம் முட்புதரில் சிக்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM