கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையிலுள்ள ‘முள்ளூர்’ பகுதியில் பள்ளி வாகனத்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்து கண்ணாடியை உடைத்தது. பள்ளி வாகனத்தில் குழந்தைகள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோத்தகிரி முள்ளூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஒற்றை காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது நெடுஞ்சாலையில் உலாவரும் இந்த ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த இந்த ஒற்றை காட்டு யானை, பள்ளி வாகனத்தை வழிமறித்து சிறிது நேரம் வாகனத்தின் அருகேயே நின்று வாகனத்தின் கண்ணாடியை உடைத்தது.
பள்ளி வாகனத்தை நோக்கி யானை வரும்பொழுது ஓட்டுநர் வாகனத்தின் பின்புறம் இருந்து அச்சத்துடன் ஓடிய காட்சியை பின்னால் இருந்த வாகன ஓட்டி ஒருவர் படம் பிடித்துள்ளார். பின்பு இரு வாகனத்தில் இருந்தவர்களும் யானையைக் கண்டு வாகனத்திலிருந்து இறங்கி உயிர் தப்பியுள்ளனர். பள்ளி வாகனத்தில் குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அடர்ந்த வனப்பகுதியில் யானையை விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM