அதிமுகவில் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் கண்ணும் இமையும்போல நகமும் சதையும்போல ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பின் அதிமுகவில் கடந்த 5 வருடங்களாக பல சச்சைகள் எழுந்து வருகிறது. இதில் தற்போது புதிதாக உருவெடுத்துள்ளது ஒற்றை தலைமை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம் என்றும், ஒற்றை தலைமை இல்லாததே சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என்றும் மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கட்சியில் ஒற்றை தலைமை குறித்து பரிசீலனை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில்.கட்சி யார் தலைமையில் இயங்கும் என்பது குறித்து ஒ.பி.எஸ் இ.பி.எஸ் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களது ஆதரவான கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகினறனர். மேலும் ஒபிஎஸ் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என்று பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதனிடையே வரும் 23-ந் தேதி சென்னை ராயப்பேட்டை அதிமக அலுவலகத்தில் நடைபெற உள்ள கட்சி பொதுக்குழு கூட்டம் குறித்து ஆலோசனை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியில் மூத்த தலைவர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
“பொதுக்குழு தீர்மானம் பற்றிதான் இன்று கூட்டம் நடந்தது. ஒற்றைத் தலைமை குறித்த கேள்வியே தற்போது தேவையற்ற கேள்வி, அதுகுறித்து பொதுக்குழு முடிவு செய்யும். பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி கட்டாயமாக நடைபெறும். ஒற்றைத் தலைமை குறித்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடுதான் என் நிலைப்பாடு.
ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக பேசவில்லை. கண்ணும் இமையும் போல, நகமும் சதையும் போல இணைந்து செயல்படுகின்றனர். ஒற்றைத் தலைமை எல்லாம் மற்றவர்கள் கிளப்புகிற பிரச்சினை. அதுகுறித்து கட்சிதான் முடிவெடுக்கும். நகமும் சதையும் போல அதிமுக ஒற்றுமையாக இருக்கிறது. ஊடகங்கள்தான் ஒற்றைத் தலைமை என்ற பேச்சை கிளப்புகின்றன,நாங்கள் கிளப்பவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக கட்சி பொதுக்குழு தொடர்பாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால் இந்த கூட்டத்திற்கு ஒ.பன்னீர்செல்வம் வருகிறார் என்று தெரிந்த உடன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் கட்சி அலுவலகத்தில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வருகிற 18-ந் தேதி மீண்டும் மற்றொறு கூட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 23-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நிச்சயமாக நடைபெறும். இன்றைய கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அது குறித்து முடிவு செய்யப்படும். ஒபிஎஸ் அலுவலகத்திற்கு வருவதும் கூட்டம் நிறைவு பெறுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil