குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்தம்) ,சிவில் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்

பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் இரண்டாவது வாசிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் சிவில் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றுக்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழு அண்மையில் (09) அனுமதி வழங்கியது.

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 442ஆம் பிரிவு திருத்தப்படவிருப்பதுடன், வழக்குத் திறந்தவர்களுள் ஒவ்வொருவருக்கும் தீர்ப்பின் அல்லது பதிவேட்டின் இறுதிக் கட்டளையின் ஒரு சான்றுப்படுத்தப்பட்ட பிரதியை வழங்குவதையும் இது ஏற்பாடு செய்கிறது.

குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைத் (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை சட்டத்தின் 154(அ)  எனும் புதிய பிரிவு உட்புகுத்தப்படுவதுடன்,  எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில் விதிமுறைப்பட்ட எண்பிப்பிலிருந்து குறித்த சில ஆவணங்களை விலக்களிப்பதும் இதன் மூலம் இடம்பெறும்.

இக்கூட்டத்தில் கௌரவ ஜீ.ஜீ.பொன்னம்பலம், கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ எம்.ஏ.சுமந்திரன், கௌரவ டயனா கமகே, கௌரவ தாரக பாலசூரிய, கௌரவ மயந்த திஸாநாயக உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.