மும்பை,
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் இஷான் கிஷான் 2 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார்.
இந்த தொடருக்கு முன்பாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 15 கோடி கொடுத்து வாங்கியது. கடந்த இரண்டு சீசன்களை விட அவர் சிறப்பாக விளையாடி 400 ரன்களுக்கு மேல் அடித்த போதிலும் அவர் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என குரல்கள் எழுந்தது. ஆனால் அவர் மீண்டும் ஒருமுறை தனது பேட்டிங் திறமையை தென் ஆப்பிரிக்க தொடரில் நிரூபித்துள்ளார். குறிப்பாக நேற்று வெளியான 20 ஓவர் பேட்டிங் தரவரிசையில் இவர் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் இவர் மீதான விமர்சனங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பதிலடி கொடுத்துள்ளார். இஷான் கிஷன் குறித்து கபில் தேவ் கூறியதாவது :
ரூ.15 கோடி என்ற தொகை தான் இஷானுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு இவ்வளவு பணம் கிடைத்தது நல்லது. இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கும் அளவுக்கு எந்த அணி நிர்வாகமும் முட்டாள் இல்லை. இந்த வீரர் திறமையானவர் என்பதை அவர்கள் அறிவார்கள். அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பிறகு வீரர்கள் மீது எதிர்பார்ப்புகள் எழும்.
இதுபோன்ற அழுத்த நிலையில் யுவராஜ் சிங் இருந்துள்ளதை பார்த்துள்ளோம். அதே போல தினேஷ் கார்த்திக், பதான் சகோதரர்களுக்கும் நடந்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் பெரும் பணம் கிடைத்த போது அவர்களே அழுத்தத்தை உணர்த்துள்ளார்கள். அதே நேரத்தில், எந்த அழுத்தமும் இல்லாமல், அச்சமின்றி விளையாடும் இளைஞர்களும் உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.