சான் பிரான்சிஸ்கோ: யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தில் மாதந்தோறும் சுமார் 1.5 பில்லியன் (150 கோடி) எண்ணிக்கைக்கு மேலான பயனர்கள் வீடியோக்களை பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் டிக்டாக் செயலி தடையை தொடர்ந்து கடந்த 2020 செப்டம்பர் வாக்கில் யூடியூப் ஷார்ட்ஸ் தளம் பீட்டா வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 2021 ஜூலையில் உலக அளவில் ஷார்ட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. 15 முதல் 60 நொடிகள் வரையில் போர்ட்ரைட் மோடில் பயனர்கள் இதில் வீடியோக்களை பார்க்கலாம், பகிரலாம். ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட தளம் எனவும் இதை சொல்லலாம்.
இப்போது உலக அளவில் இது மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. பயனர்கள் இதில் வீடியோக்களை கீழிருந்து மேலாக ஸ்க்ரோல் செய்து பார்க்கலாம். அதோடு லைக், ஷேர் மற்றும் கமென்ட் செய்யலாம்.
இந்நிலையில், யூடியூப் ஷார்ட்ஸ் தளத்தில் உள்ள வீடியோக்களை மாதந்தோறும் சுமார் 1.5 பில்லியன் பயனர்கள் பார்த்து (Views) வருவதாக தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. யூடியூப் தளத்தின் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஷார்ட்ஸ் நிச்சயம் பெரிய பங்கு வகிக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது. ஷார்ட்ஸ் தளம் அதன் தொடக்க நிலைகளில் இருப்பதாகவும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்களுக்கு விளக்கமான வேண்டுமென்றால் நீண்ட நேர டியூரேஷன் கொண்ட யூடியூப் வீடியோக்களை பார்ப்பதாகவும், ஷார்ட் கன்டென்ட் வீடியோக்களை பார்க்க விரும்பும் பயனர்களுக்கு ஷார்ட்ஸ் பயன்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மல்டிமீடியா கிரியேட்டர்கள் ஷார்ட்ஸ் மூலம் தங்களது வீடியோக்களை புரொமோட் செய்யவும், வியூஸ்களை அதிகரிக்க செய்யவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிகிறது.