எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட சின்ன ஆவுடையார் கோயில் உரிய பராமரிப்பு இல்லாததால் முற்றிலும் சிதிலமடைந்து, சுவாமி சிலைகளை கூரை கொட்டகையில் வைத்து பூஜை செய்யும் அவல நிலையில் இருந்து வருகிறது.
தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப் புராதன கோயிலை சீரமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள கொள்ளுக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி சின்ன ஆவுடையார்கோயில். இக் கிராமத்திற்கு இப் பெயர் வரக் காரணமே இங்குள்ள சிவாலயம்தான்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற கோயிலான சிவாலயம் போலவே பட்டுக்கோட்டை அருகே சின்ன ஆவுடையார் கோயிலில் உள்ள இக்கோயிலும் 600 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது என்கிறார் கொள்ளுக்காடு ஊராட்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீ.சாமியப்பன்.
இவ்விரு ஆலயங்களிலும் மாணிக்கவாசகர் நீண்ட காலம் தங்கி சிவபெருமானை வழிபட்டது கூடுதல் சிறப்பு. இக்கோயிலில் மாணிக்கவாசகர் தங்கி சிவனை வழிபட்டு வந்ததால் மாணிக்கவாசகரின் சிலையும் இங்கு வைக்கப்பட்டு அதை தற்போது பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இக் கோயில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரமாக கோயில் சுவர்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்கிறார் கொள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கே.எம். பெருமாள்.
இக் கோயிலில் சிவன், அம்பாள் என 26 தெய்வங்களின் சிலைகள் உள்ளன. தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் உரிய பராமரிப்பு இல்லாததால் தற்போது முற்றிலும் சிதிலமடைந்து, அச் சிலைகள் அனைத்தும் ஒரு கூரை கொட்டகையில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருவது பக்தர்களை பெரும் வேதனை அடையச் செய்துள்ளது என்கிறார் 74 வயதுடைய எம்பெருமாள்.
“இக் கோயிலை சீரமைக்கக்கோரி கடந்த 2006-ஆண்டு சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் எழுதினோம். அதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் இக்கோயிலின் மூலவர்க்கான கட்டடம் கட்ட ரூ.4.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான ஒப்பந்தம் திருவாரூரைச் சேர்ந்த சிவமாரன் என்பவர் ஒப்பந்தக்காரருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், மூலவர்க்கான கட்டடம் கட்டுவதற்கான குழி தோண்டி அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் அவருக்கும் அப்போதைய செயல் அலுவலருக்கும் இடையே எழுந்த பிரச்னை காரணமாக கட்டுமானப் பணி அப்படியே நின்று விட்டது என்கிறார் எம்பெருமாள்.
பல கட்ட முயற்சிகளுக்கு பின்னர் சாரநாதன் என்ற ஓய்வு பெற்ற தொல்லியல் துறை இன்ஜினியர் ஓராண்டுக்கு முன்பு இங்கு வந்து 20 நாட்கள் தங்கியிருந்து இக்கோயிலின் புராதனம் குறித்து ஆய்வு செய்து அவரது அறிக்கையை தொல்லியல் துறைக்கு சமர்ப்பித்துள்ளார்.
இக் கோயிலை சீரமைக்க தொல்லியல் துறை சார்பில் மூன்று முறை திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எனவே, இந்த ஆலயத்தை உடனடியாக அளவீடு செய்து, திட்ட அறிக்கை தயாரித்து, போதுமான நிதி ஒதுக்கி சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கும் அறநிலையத் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“