அ.தி.மு.க-வில் நடந்து முடிந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வெடித்த ஒற்றைத் தலைமை விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், `கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை… அது காலத்தின் கட்டாயம், அது குறித்துத்தான் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது!’ எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இது ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் என இருதரப்பு ஆதரவாளர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ், “அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜெயக்குமாரின் கருத்து கட்சியின் கருத்து அல்ல… அவர் கூட்டத்தில் நடந்ததை பற்றி ஊடகங்களிடம் பேசியதே தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சீராகச் செயல்பட்டு வருகிறது. கட்சியை அழிக்க யார் நினைத்தாலும் ஓ.பி.எஸ் விடமாட்டார்” என்றார்.
இந்த நிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர வேறு ஒருவரைக் கொண்டு வரக்கூடாது என ஏற்கெனவே பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் துணை முதல்வர் பதவி வேண்டாம் என மறுத்தேன். பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அதை ஏற்றுக்கொண்டேன். துணை முதல்வர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனவே, எந்தவொரு அதிகார ஆசையும் எனக்கு இல்லை.
மேலும், எந்த காரணத்திற்காகவும் கட்சி இரண்டாக உடையக்கூடாது. நான் எனது தொண்டர்களுக்காகத் தான் இந்த இயக்கத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். எந்த கருத்துவேறுபாடு வந்தாலும் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயாராகவே இருக்கிறேன். எங்களுக்குள் எந்த ஈகோவும் கிடையாது. தற்போதைய சூழலில் இரட்டைத் தலைமை நன்றாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 6 ஆண்டுகளாகச் சிறப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த இரட்டைத் தலைமையே தொடரும். அ.தி.மு.க தொண்டர்களிடமிருந்து என்னை ஓரங்கட்ட யாராலும் முடியாது. தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கொண்டுவரப்பட்டது. அது எப்போதும் மாறாது. எனவே ஒற்றைத் தலைமை என்பது தேவையற்றது. பொதுக்குழுவில் எனது ஒப்புதலின்றி பொதுச்செயலாளர் பதவிக்குத் தீர்மானம் போட முடியாது. கட்சியில் இரட்டைத் தலைமையே நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது.
இப்படியிருக்கும் போது ஒற்றைத் தலைமை குறித்து நானோ, பழனிசாமியோ பேசியதில்லை. ஒற்றைத் தலைமை முடிவு ஜெயலலிதாவுக்குச் செய்யும் துரோகம். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் என்னுடைய கருத்தை கழக நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டேன். எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை தேவையா… இல்லையா என்பது குறித்து அவருடைய கருத்தை தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.