யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. கோலிவுட்டில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள யோகி பாபு, பாலிவுட்டில் அட்லீயின் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நகைச்சுவை நடிப்பு மட்டுமின்றி, அவ்வப்போது கதாநாயகனாகவும் யோகி பாபு நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கதாநாயகனாக இவரது நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை ‘ஏ1’, ‘பாரீஸ் ஜெயராஜ்’, போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன் இயக்கி, தயாரிக்கிறார். ‘மெடிக்கல் மிராக்கல்’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் யோகி பாபுக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கிறார்.
மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், வினோத், பாலா, தங்கதுரை உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இந்தப் படத்தில் யோகிபாபு ஓலா டிரைவராக நடிப்பதாகவும், முழுக்க முழுக்க அரசியல் நகைச்சுவையாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.