மத்திய அரசின் அக்னிபத் திட்டம் – வடமாநிலங்களில் வெடிக்கும் போராட்டம்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள ‘அக்னிபத்’ என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்கள் முழுவதும் பெரும் போராட்டங்கள் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பான விரிவான செய்தி தொகுப்பை காணலாம்.
ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய பாதுகாப்புப் படைகளில் 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கு நான்காண்டுகள் தற்காலிக வேலை வாய்ப்பினை கொடுக்கும் அக்னிபத் என்ற புதிய திட்டத்தினை நேற்றைய தினம் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 46 ஆயிரம் வீரர்கள் வரை பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவதுடன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் வழக்கமான பணி நியமனங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை பார்த்த 25% நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
தற்பொழுது இந்தத் திட்டத்திற்கு எதிராகத்தான் வட மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் தொடங்கியுள்ளது. பீகாரின் பல இடங்களில் சாதாரணமாக தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. சாப்ரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலுக்கு இளைஞர்கள் சிலர் தீ வைத்தனர். மேலும் பல இடங்களில் ரயில் தண்டவாளங்களில் நெடுஞ்சாலைகளிலும் டயர் உள்ளிட்டவற்றை எரித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். பல இடங்களில் ரயில் பாதைகளை மறித்த இளைஞர்கள் உடற்பயிற்சிகளை செய்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
image
நவாடா என்ற இடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தை இளைஞர்கள் அடித்து நொறுக்கி தீ வைக்கவும் செய்தனர். இதனையடுத்து வன்முறையாளர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போன்றவற்றை காவல்துறையினர் மேற்கொண்டனர். தொடர்ந்து பீகாரின் பல இடங்களில் பதற்றமான நிலை நீடித்து வருகின்றது. இதேபோல ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் போராட்டங்களும் வன்முறையும் நடந்து வருகின்றது.
போராட்டத்தில் கலந்துகொண்ட பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வது என்பது தங்களுடைய கனவு என்றும், வெறும் நான்கு ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணிபுரிய முடியும் என்றால் அதற்கு பிறகு நாங்கள் எதிர்காலத்திற்கு எங்கே செல்ல முடியும்? மேலும் இந்த புதிய திட்டத்தினால் நாட்டினுடைய ராணுவ பாதுகாப்பு பலவீனப்படும். எனவே ஒருபோதும் இந்த திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கருத்து கூறுகின்றனர். இதற்கிடையில் போராடும் இளைஞர்களை சமாதானப்படுத்த மத்திய அரசு ஆலோசனைகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
– நிரஞ்சன் குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.