புதுடெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் (பங்க்) விற்பனை அதிகரித்து வருவதாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் இல்லாததால் பல விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் தேவையை சமாளிக்கும் வகையில் நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் சில பகுதிகளில் பொதுத்துறை பெட்ரோல் விற்பனை நிலையங்களில், சில நாட்களாக விற்பனை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் 50 சதவீதம் அளவுக்கும் கூடுதலாக பெட்ரோல், டீசலுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் விற்பனை நிலையங்களில் தாமதம், வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்றவை நடக்கிறது. இது, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வினியோக தடைகள் பற்றிய யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. விவசாய நடவடிக்கைகள், மொத்தமாக வாங்குபவர்கள் தங்கள் கொள்முதலை பெட்ரோல் பம்புகளுக்கு மாற்றியது மற்றும் தனியார் விற்பனை நிறுவனங்களில் வாங்குவோர் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கொள்முதலை மாற்றியது போன்றவை காரணமாக உள்ளது. எனினும் நாட்டின் பெட்ரோல், டீசல் உற்பத்தியானது, தேவையை விட அதிகளவுக்கு உள்ளது. இதன் மூலம் எத்தகைய திடீர் தேவை அதிகரிப்பையும் சமாளிக்க முடியும். அதேநேரம் தற்போதைய திடீர் தேவை அதிகரிப்பு காரணமாக சில தற்காலிக தொழில்நுட்ப பிரச்னைகளை உள்ளூர் மட்டத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.எனவே எண்ணெய் நிறுவனங்கள், டெப்போக்கள் மற்றும் வினியோக மையங்களில் இருப்புகளை அதிகரித்தல், சில்லறை விற்பனை நிலைய சேவைக்காக டேங்கர் லாரிகளின் கூடுதல் இயக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பிரச்னை சரி செய்யப்படும். மேலும் டெப்போக்கள் மற்றும் வினியோக மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு மற்றும் தேவைப்படும் மாநிலங்களில் விநியோகம் செய்வதற்கு கூடுதல் எரிபொருட்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் தகவல் வெளியிட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் கட்டணங்கள் அதிகரிக்காததால், அரசு போக்குவரத்துக்கழகம் போன்ற மொத்தமாக வாங்குபவர்கள் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்குவதை விட பெட்ரோல் பம்புகளிலேயே நிரப்புவதே இத்தகைய தேவை அதிகரிப்புக்கு காரணம் என அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. எனினும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்கான பெட்ரோல், டீசல் போதுமான அளவுக்கு கையிருப்பு இருப்பதாகவும் கூறியுள்ளன.சென்னையில் விலை நிலவரம்: சென்னையில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தொடர்ந்து 26வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தமிழகத்திலும் தட்டுப்பாடா?: தமிழகத்திலும் சில இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேனி, பெரியகுளம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலம் வரை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலை விற்பனை நிலையங்களுக்கு வினியோகம் செய்த பிறகு, அதற்கான தொகையை குறிப்பிட்ட காலத்தில் பெற்று வந்தன. இனி முன்பணம் செலுத்தும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன. இதுவும் தட்டுப்பாட்டுக்கு காரணமாக கூறப்படுகிறது.