பிரேசிலில் அதிர்ச்சி: அமேசான் பழங்குடி மக்கள் நல ஆர்வலர்கள் இருவர் கொலை

இங்கிலாந்து பத்திரிகையாளர் டான் பிலிப், பழங்குடியின நிபுணர் ப்ரூனோ ஃபிரிரா ஆகிய இருவரும் அமேசான் காட்டில் கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டான் பிலிப் (57). இவர் தொடர்ச்சியாக அமேசான் மழைக் காடுகளின் பாதுகாப்பு குறித்தும், அமேசான் பழங்குடிகள் குறித்தும் எழுதி வருகிறார். இது தொடர்பாக புத்தகங்களையும் டான் பிலிப் எழுதியுள்ளார். அமேசான் காடுகளுக்கு எதிராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவின் நடவடிக்கையும் அவர் எதிர்த்தார்.

இந்தச் சூழலில் டான் பிலிப்பும், பிரேசிலை சேர்ந்த பழங்குடியின நிபுணரான ப்ரூனோ ஃபிரிராவும் (41) கடந்த ஜூன் 5-ம் தேதி சுலோ மாகாணத்தில் உள்ள சா கேப்ரியல் கிராமத்தில் இருந்து படகு மூலம் மற்றொரு பழங்குடியின கிராமத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ஆனால், பல மணி நேரம் கடந்தும் டான் பிலிப்பும், ப்ரூனோவும் தங்களது இலக்கான பழங்குடி கிராமத்திற்குச் செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காணவில்லை என்று பழங்குடி மக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அமேசான் அடர் காட்டில் இருவரை தேடும் பணியில் பிரேசில் போலீஸார் மற்றும் ராணுவம் இறங்கினர். இந்தத் தேடுதலில் போலீஸாருக்கும் பழங்குடி மக்கள் பெரும் உதவியாக இருந்தனர். இருவரையும் கண்டுபிடிக்க கோரி பிரேசிலில் பல இடங்களில் பேரணி நடத்தப்பட்டது.

இந்த நிலையில், டான் பிலிப், ப்ரூனோவும் கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் எரிந்த நிலையில் ராணுவத்தினர் கண்டெடுத்ததாகவும் நேற்று அறிவித்தனர்.

இருவரது கொலை தொடர்பாக அமர்லியோ என்ற நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அமர்லியோவும் அவரது சகோதரரும் அமேசான் காட்டில் உள்ள ஆற்றில் சட்ட விரோதமாக மீன் பிடித்து வந்துள்ளனர். இதனை டான் பிலிப்பும், ப்ரூனோவும் எதிர்த்துள்ளனர். இந்த நிலையில்தான் இருவரையும் அவர்கள் கொன்றதாக போலீஸாரிடம் அமர்லியோ வாக்குமூலம் அளித்துள்ளார்.

பழங்குடி மக்களின் நலுனுக்காக இயங்கி இருவர் கொல்லப்பட்டுள்ளது அமேசான் பழங்குடிகளிடமும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களிடமும் பெரும் அதிச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.