கன்னியாகுமரியில் தாய் – மகள் இரட்டை கொலை வழக்கில் கொலையாளிகள் யார் என்பது குறித்து 10 நாட்களாக மர்மம் நீடித்து வரும் நிலையில், கஞ்சா கும்பலையும் தாண்டி உறவினர்களை நோக்கி தனிப்படையினர் விசாரணையை திருப்பியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவக் கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். மீன்பிடி தொழிலாளியான இவருக்கு, பவுலின் மேரி என்ற மனைவியும், அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் உண்டு. ஆன்றோ சகாயராஜ் மற்றும் மூத்த மகன் அலன் ஆகியோர் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருகின்றனர். இளைய மகன் ஆரோன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் மனைவி பவுலின்மேரி, அவரது தாயார் திரேசம்மாள் உடன், முட்டம் பகுதியில் ஆள் அரவமற்ற பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே அமைந்துள்ள பங்களா வீட்டில் தனியாக வசித்து வருகின்றார். கடந்த 6-ம் தேதி இரவு தாய் திரேசம்மாள் மற்றும் மகள் பவுலின் மேரி ஆகிய இருவரும், உறவினர் ஒருவரிடம் செல்ஃபோனில் பேசி விட்டு தூங்க சென்றதாகத் தெரிகிறது. பின்னர் 7-ம் தேதி காலை அவர்கள், மீண்டும் பவுலின் மேரியை செல்ஃபோனில் தொடர்பு கொண்டபோது பதிலளிக்காத நிலையில், பதறிய உறவினர்கள் 7-ம் தேதி மதியம் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் கதவு பூட்டிய நிலையில் ஆள் அரவமின்றி காணப்பட்டதால் சந்தேகமடைந்த அவர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்துள்ளனர். அப்போது தாயும், மகளும் வீட்டின் நடு தளத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். உடனடியாக உறவினர்கள், வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததோடு, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அந்த பங்களா வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள், முதலில் வீட்டிற்கு வெளியே இருந்த மின்சார மீட்டரை உடைத்து, மின்சாரத்தை துண்டித்து விட்டு, பின்னர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்த வீட்டில் இருந்த அயர்ன் பாக்ஸ்சால் தாய் மற்றும் மகளை தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்து விட்டு, பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலி சங்கிலி, தாய் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலி என 16 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் அறுத்த எடுத்துள்ளனர். தாய் மற்றும் மகளின் கையில் கிடந்த மோதிரத்தையோ, காதணிகளையோ எடுக்காமலும், வீட்டில் இருந்த பீரோக்களையும் உடைத்து நகைகளை திருட முயற்சி செய்யாமலும் வீட்டிற்கு வெளியே வந்து மீண்டும் கதவை பூட்டி தப்பியோடியுள்ளனர்.
70 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் தப்பியதாக தெரிகிறது. ஆனால் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க திட்டம் போட்டு தாயும், மகளையும் கொலை செய்தார்களா, இல்லை அப்பகுதியில் முகாமிட்ட கஞ்சா கும்பல், முன் விரோதம் காரணமாக இந்த கொலையை செய்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து நெல்லை சரக டிஜஜி பிரவேஷ் குமார் மற்றும் எஸ்பி ஹரி கிரண் பிரசாத் ஆகியோர் உத்தரவிட்டார்.
5 தனிப்படை அமைத்து உத்தரவிட்ட நிலையில் அயர்ன் பாக்ஸ் மற்றும் கைரேகையை முக்கிய தடயமாக வைத்து விசாரணையை முன்னெடுத்த நிலையில், மேலும் ஒரு தடயமாக வீட்டு தோட்டத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மங்கி குல்லாவின் வீடியோவை டிஎஸ்பி தங்கராமன் வெளியிட்டு விசாரணை நடத்தினர். கடந்த 10 நாட்களாக கஞ்சா கும்பலை சேர்ந்த நபர்களை பிடித்து கிடுக்குபிடி விசாரணை நடத்தியும், அவர்களிடம் இருந்து எந்த தடயமோ ஆதாரமோ சிக்கவில்லை என கூறப்படுகிறது. கஞ்சா கும்பல்தான் கொலை செய்ததாக வதந்தி செய்திகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
ஆனால் கொலையாளிகள் யார்? என்பதில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. கஞ்சா கும்பலிடம் விசாரணையை நடத்தி வந்த நிலையில் சொத்து பிரச்னை அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் தனிப்படை போலீசார், கஞ்சா கும்பலையும் தாண்டி யூடர்ன் அடித்து விசாரணையை உறவினர்கள் மீது திருப்பியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கொலையான பவுலின்மேரியுடன் செல்ஃபோனில் தொடர்பில் இருந்தவர்கள் யார்? கொலை நடந்த பகுதியில் அன்றைய தினம் பயன்பாட்டில் இருந்த செல்ஃபோன எண்களை ஆய்வுசெய்து அந்த நபர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM