புதுடெல்லி: முஸ்லிம்களின் இறைத் தூதரான முகம்மது நபிகள் குறித்து பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளரான நூபுர் சர்மா தவறாக விமர்சித்த சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு ஷியா பிரிவு முஸ்லிம்கள் புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து உத்தரப் பிரதேசத்தின் ஷியா மத்திய வஃக்பு வாரியத் தலைவர் அலி ஜைதி வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “வெள்ளிக்கிழமை தொழுகைகளில் சர்ச்சைக்குரியப் பேச்சுக்களை தவிர்க்கவும். தொழுகைக்கு பின்னர் முஸ்லிம்கள் கூட்டம் சேருவதோ, ஊர்வலமாகச் செல்வதோ கூடாது. வெள்ளிக்கிழமை தொழுகைகளில் வழக்கமாக அளிக்கப்படும் பிரசங்கம் தேவையில்லை.
ஏனெனில், இதன் கருத்துகளால் சர்ச்சைகள் எழுந்து கலவரமாகி மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் வாய்ப்பாக அது அமைந்து விடுகிறது. இந்த ஏற்பாடுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நபிகள் குறித்து தெரிவித்த விமர்சனத்திற்காக நூபுர் சர்மா பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனினும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் உத்தரப் பிரதேசத்தின் திரளான மசூதியில் கூடும் சன்னி பிரிவு முஸ்லிம்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதுபோன்ற ஒரு கண்டன ஊர்வலம் கடந்த 10-ம் தேதி கான்பூரில் நடைபெற்ற போது, அதில் கலவரம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் முழுவதிலும் உருவானக் கலவரங்களால் 300-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை என்பதால் உத்தரப் பிரதேசத்தில் அதிகமாக வாழும் ஷியா பிரிவு முஸ்லிம்களின் இந்த அறிவுறுத்தல் வெளியாகி உள்ளது.