ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வேலைக்கான அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு வடமாநிலங்களில் போராட்டம் வெடித்தது: பீகாரில் ரயில்களுக்கு தீ வைப்பு; அரியானாவில் துப்பாக்கிச்சூடு

புதுடெல்லி: ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கும் ன்றிய அரசின் அக்ப்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்திய ஆயுதப்படையை பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக, முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய ‘அக்னிபாத்’ ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். 4 ஆண்டு கால சேவை முடிந்த பின் அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்படுவார்கள். இத்திட்டத்தில் 4 ஆண்டு கால குறுகிய சேவை நிறைவு செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும். மேலும், இந்த திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த அக்னி வீரர்களுக்கு, ஒன்றிய ஆயுத போலீஸ் படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவுகளில் முன்னுரிமை அளிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அக்னி வீரர்களின் எதிர்கால தொழில் வாய்ப்புகளை மனதில் கொண்டு, 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை ஒன்றிய கல்வி அமைச்சகம் தொடங்க திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் குறுகிய கால சேவை ஆட்சேர்ப்புக்கு பீகார், ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ராணுவ வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். பீகாரில் ரயிலலுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். பாபுவா மற்றும் சாப்ரா ரயில் நிலையங்களில் 3 ரயில்களுக்கு இளைஞர்கள் தீ  வைத்தனர். பல இடங்களில் பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து  நொறுக்கினர். அர்ரா ரயில் நிலையத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள்  குவிந்ததால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.   பாட்னா-கயா, பரௌனி-கதிஹார் மற்றும் டானாபூர்-டிடியு போன்ற பரபரப்பான  வழித்தடங்கள் மறியல் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரயில் தண்டவாளங்கள் மற்றும் சாலைகளில் எரியும் டயர்களை வீசினர். இதனால் பல ரயில்கள், நிலையங்களுக்கு வெளியே ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. தெருக்களில் இளைஞர்கள் புஷ்-அப் மற்றும் பிற பயிற்சிகள் எடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைந்தனர். நவாடாவில், நீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்த பாஜக எம்எல்ஏ அருணா தேவியின் வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல் வீசித் தாக்கினர். இதில் எம்எல்ஏ அருணா தேவி, அவரது ஓட்டுநர், இரண்டு பாதுகாவலர்கள் மற்றும் இரண்டு தனிப் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். பாஜ அலுவலகத்துக்கும் தீவைக்கப்பட்டது. பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. ஜெகனாபாத், பக்சர், கதிஹார், சரண், போஜ்பூர் மற்றும் கைமூர் போன்ற மாவட்டங்களில் நடந்த மறியல் மற்றும் கல்வீச்சு சம்பவங்களால் பல காயமடைந்துள்ளனர். போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.  அரியானாவில் குருகிராம், ரேவாரி மற்றும் பல்வால் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. பல்வாலில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், போலீசார் மீது கல்வீசு தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. இதனால், இளைஞர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பல இடங்களில் வாகனங்களுக்கு தீவைத்தும், சாலைகளில் டயர்களுக்கு தீவைத்தும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லி எல்லையிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குருகிராம் மற்றும் ரேவாரி அருகே உள்ள பிலாஸ்பூர் மற்றும் சித்ராவலி பகுதிகளில் இளைஞர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், குருகிராம்-ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா நெடுஞ்சாலை முடக்கப்பட்டது. இதேபோல், ராஜஸ்தான், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் லும் பல இடங்களில் மறியல், கல்வீசு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.  அக்னிபாத் திட்டம் நாட்டின் பாதுகாப்பு எதிரானதும் என்றும், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று  கூறி ஒவ்வொரு மாநிலத்திலும் போராட்டம் வெடித்து வருவதால், இத்திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். * ‘அக்னிபரீட்சை’ வேண்டாம்ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பதவி இல்லை, ஓய்வூதியம் இல்லை, 2 ஆண்டுகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு இல்லை, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை, ராணுவத்திற்கு அரசாங்கம் காட்டும் மரியாதை இல்லை. நாட்டின் வேலையற்ற இளைஞர்களின் குரலைக் கேளுங்கள். அவர்களை அக்னிபாத்தில் நடக்க வைப்பதன் மூலம் அவர்களின் பொறுமையை ‘அக்னிபரீட்சை’ செய்து பார்க்காதீர்கள், மிஸ்டர் பிரதமர்’ என்று கூறி உள்ளார்.* வேலையற்றவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, பாஜ எம்பி வருண் காந்தி எழுதி உள்ள கடிதத்தில், ‘75% வீரர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வேலையற்றவர்களாக மாறுவார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெறும் வழக்கமான ராணுவ வீரர்களைக் கூட கார்ப்பரேட் துறை அதிக அளவில் பணியில் அமர்த்துவதில் ஆர்வம் காட்டாதபோது, ​​இந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கும்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.* ராணுவ அமைப்பில் எந்த மாற்றமுமில்லைஅக்னிபாத் இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தின் படைப்பிரிவு அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் ஆண்டில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை ஆயுதப்படைகளில் 3% மட்டுமே இருக்கும். 4 ஆண்டுகளுக்குப் பிறகு இராணுவத்தில் மீண்டும் சேர்க்கப்படுவதற்கு முன் அவர்களின் செயல்திறன் சோதிக்கப்படும். இது இந்திய ஆயுதப்படைகளின் நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளை அவமதிக்கும் செயலாகும்  என்று அரசாங்கம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. * நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்துசமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாட்டின் பாதுகாப்பு குறுகிய கால அல்லது முறைசாரா பிரச்சனை அல்ல; அது மிகவும் தீவிரமான மற்றும் நீண்ட கால கொள்கையை எதிர்பார்க்கிறது. ராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பாக பின்பற்றப்படும் அலட்சிய அணுகுமுறை, நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு என்று வரும்போது ராணுவ ஆட்சேர்ப்பு அபாயகரமானதாக இருக்கும்’ என்று கூறி உள்ளார்.* கிராமப்புற இளைஞர்களுக்கு தீங்குபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இது கவர்ச்சிகரமான திட்டம் என்று அழைக்கப்பட்டாலும், நாட்டின் இளைஞர்கள் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளனர். இது கிராமப்புற இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அநியாயமானது மற்றும் தீங்கு விளைவிக்கும். அரசாங்கம் உடனடியாக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.