புதுடில்லி :ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு, பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து, ‘இத்திட்டத்தால் முப்படைகளில் உள்ள படைப்பிரிவுகளில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது’ என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நம் ராணுவத்தில், ‘அக்னி வீரர்’கள் என்ற புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபத் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இளைஞர்கள் போராட்டம்
நான்கு ஆண்டுகளுக்குப் பின், இவர்களில் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அக்னி வீரர்களாக தேர்வு செய்யப்படுவோரில் ௭௫ சதவீதம் பேருக்கு பணி பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால், இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இத்திட்டத்தால், முப்படைகளில் உள்ள சீக்கியர், ஜாட் போன்ற படைப்பிரிவுகளில் மாற்றம் ஏற்படும் என கூறியும், அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீஹாரில் நேற்று பல இடங்களில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பாபுவா சாலை ரயில் நிலையத்தில், ‘இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கி, ஒரு பெட்டிக்கு தீ வைத்தனர்.
அராஹ் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் அங்கு வந்த போலீசார் மீது கற்களை வீசினர். இதையடுத்து கண்ணீர் புகைகுண்டுகளை வீசி, போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
50 ஆயிரம் பேர்
நவாடா என்ற இடத்தில் சாலை மறியல் நடத்திய போராட்டக்காரர்கள், பா.ஜ., – எம்.எல்.ஏ., அருணா தேவி சென்ற கார் மீது கற்களை வீசி தாக்கியதில், எம்.எல்.ஏ., உட்பட ஐந்து பேர் காயம் அடைந்தனர். நவாடாவில் பா.ஜ., அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் முன், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
உத்தர பிரதேசத்தில் புலந்த்ஷர், பாலியா மாவட்டங்களில் போராட்டம் நடந்தது.போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பற்றி மத்திய அரசிடம் தெரிவிப்பதாக, அதிகாரிகள் உறுதியளித்ததன் படி, அவர்கள் கலைந்து சென்றனர்.ஹரியானாவில் ரிவாரி, பல்வால், குர்கான் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. பல்வாலில் போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில், போலீஸ் வாகனம் சேதம்அடைந்தது. குருகிராமில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இப்படி சில மாநிலங்களில் போராட்டம் நடந்துள்ள நிலையில், அக்னிபத் திட்டம் பற்றி, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:நாட்டுக்கு சேவை செய்யும் எண்ணத்தை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் நோக்கில் தான், அக்னிபத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ௫௦ ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால், முப்படைகளில் உள்ள படைப்பிரிவுகளில் மாற்றம் எதுவும் செய்யப்பட மாட்டாது. மேலும் இத்திட்டத்தால், எந்தப் பகுதியைச் சேர்ந்தோருக்கும், ராணுவத்தில் சேரும் வாய்ப்பு சிறிதும் பாதிக்கப்படாது.
நான்கு ஆண்டுகளுக்குப் பின், அக்னி வீரர்களில் திறன் மிக்கோருக்கு மட்டுமே, முப்படைகளில் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். இந்த திட்டம், பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்த பின் தான், நாட்டில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டு கால பணி முடிந்து, வீடு திரும்பும் அக்னி வீரர்களால், சமூகத்துக்கு ஆபத்து ஏற்படும் என சிலர் கூறுவது, ராணுவ வீரர்களை
இழிவுபடுத்துவது போல் உள்ளது.
நாட்டுக்கு சேவை
சீருடை அணிந்து, நான்கு ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்தோர், ஒரு நாளும் தேச விரோதியாக, சமூக விரோதியாக, பயங்கரவாதிகளாக மாற மாட்டார்கள். இவ்வாறு ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறின.
இளைஞர்களிடம் நம்பிக்கையில்லை
அக்னிபத் திட்டம் பற்றி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு, பா.ஜ., – எம்.பி., வருண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:ராணுவத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அக்னிபத் திட்டம், இளைஞர்கள் மனதில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அக்னிபத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களில் ௭௫ சதவீதம் பேர், நான்கு ஆண்டுகளுக்கு பின், ஓய்வூதியம் உட்பட எந்த சலுகையும் இன்றி திரும்ப வேண்டும் என்பதால், இத்திட்டத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. நான்கு ஆண்டு
களுக்குப் பின் வேலையின்றி திரும்பும் அக்னி வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்? அவர்களுக்கு யார் வேலை கொடுப்பர் என தெரியவில்லை.ராணுவத்தில் ௧௫ ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு கூட, பணி நியமனத்தில் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நான்கு ஆண்டு கால பணியில், அவர்
களின் கல்வியும் பாதிக்கும். அதனால், இந்த திட்டம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு வருண் கூறியுள்ளார்.