வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை-மஹாராஷ்டிராவில், எலிகள் இழுத்துச் சென்ற தங்க நகைகள் இருந்த பையை மீட்டு, போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசிக்கும் சுந்தரி, தன் நகைகளை அடகு வைக்க நேற்று வங்கிக்கு சென்றார். செல்லும் வழியில் இருந்த ஆதரவற்ற குழந்தைகளுக்காக, உணவு வைத்திருந்த பையை கொடுத்து விட்டு சென்றார். வங்கிக்கு சென்ற பின், நகைகளை வைத்திருந்த பையை காணாமல் சுந்தரி அதிர்ச்சி அடைந்தார்.
உணவு எடுத்து வந்த பையில் நகைப் பையை வைத்தது, அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனே, குழந்தைகள் இருந்த இடத்துக்கு சென்றார்.ஆனால், அங்கு அவர்கள் இல்லை. சுந்தரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து விசாரித்த போது, குழந்தைகள் அந்தப் பையை குப்பையில் வீசியதாக தெரிவித்தனர். போலீசார் குப்பையை கிளறிப் பார்த்தும் பை கிடைக்கவில்லை.
இதையடுத்து, அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சில எலிகள் குப்பையில் கிடந்த உணவுப் பையை சாக்கடைக்குள் இழுத்து சென்றது பதிவாகி இருந்தது.
இதையடுத்து துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, சாக்கடைக்குள் தேடியபோது நகைகள் இருந்த பை கிடைத்தது. அதில் இருந்த நகைகளை போலீசார் சுந்தரியிடம் ஒப்படைத்தனர். அவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என அவர் கூறினார்.
Advertisement