சென்னை: டெல்லியில் காங்கிரஸார் மீது தாக்குதல் நடத்தி அத்துமீறலில் ஈடுபட்ட டெல்லி காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியிடம் 13-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதற்கிடையே ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரான நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை டெல்லி காவல் துறை கைது செய்தது. இந்தக் கைது நடவடிக்கையின்போது டெல்லி போலீசார் மத்திய துணை ராணுவப் படை உதவியுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதும், தலைவர்கள் மீது கண்மூடித்தனமாக நடந்துகொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தித்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சில நிர்வாகிகளை போலீசார் எட்டி உதைக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும், பெண்கள் என்றும் பாராமல் அவர்களிடமும் காட்டுமிராண்டித்தனமாக டெல்லி போலீசார் நடந்துகொண்டுள்ளனர். போலீசாரின் நடவடிக்கைகளால் கரூர் எம்.பி. ஜோதிமணியின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இதிலும் திருப்தியடையாத டெல்லி போலீசார் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியவை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில்லாமல் அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்க முடியாது. எனவே, அத்துமீறலில் ஈடுபட்ட டெல்லி காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், அவர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.