புல்டோசரில் வீடுகளை இடிப்பது பழி வாங்குதலாக இருக்க கூடாது: உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடெல்லி: வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் விவகாரத்தில் மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நபிகள் நாயகத்தை பாஜ முன்னாள் நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் சமீபத்தில் அவதூறாக பேசி இழிவுபடுத்தினர். இதை கண்டித்து உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்கள் மிக மோசமான மத கலவரமாக வெடித்தது. இதையடுத்து வன்முறைக்கு காரணமானவர்கள் என கருதப்படும் நான்கு பேரை அடையாளப்படுத்தி அவர்களது வீடுகளை புல்டோசர்கள் மூலமாக உ.பி. அரசு இடித்து தரைமட்டமாக்கியது. அதேப்போன்று கலவரத்தை தூண்டுகிறவர்கள் மற்றும் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளையும் இடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சட்டவிரோதமாக வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடிக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என ஜமியத் உலேமா ஏ ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் போபன்னா மற்றும் விக்ரம் நாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியு சிங், ‘‘குண்டர்கள், கல்லால் அடிப்பவர்கள், கலவரத்தை தூண்டுபவர்கள் என்று சந்தேகப்படக் கூடிய நபர்களின் வீடுகளை எந்தவிதமான முன் எச்சரிக்கையும் இல்லாமல் இடித்து தள்ளுகின்றனர். அதுகுறித்து கேட்டால் இடிக்கப்படும் கட்டிடங்கள் அனைத்தும் சட்டவிரோத கட்டிடங்கள் என தெரிவிக்கின்றனர். உண்மையை கூற வேண்டுமானால் சுதந்திரத்திற்கு முன்பாக அவசரநிலை காலத்தில் கூட இப்படியான ஒரு செயல்பாடு நடந்தது கிடையாது. சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களின் வீடுகளும் இடித்துத் தள்ளப்படுகிறது. இந்தியா மாதிரியான குடியரசு நாட்டில் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் நகர்ப்புற திட்ட சட்டத்தின்படி சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால் இத்தகைய விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறிவைத்து உ.பி அரசு சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.   இதையடுத்து உத்தரப்பிரதேச அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘விதிமுறைகள் பின்பற்றி தான் கட்டுமானங்கள் இடிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட யாரும் நீதிமன்றத்தை நாடாத போது இஸ்லாமிய ஜமாத்தை சேர்ந்த சிலர் தான் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்,’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘எந்தவித அறிவிப்பும் இல்லாமல் வீடுகளை இடித்தால் அவர்களால் அதனை மீண்டும் எப்படி விரைந்து உருவாக்க முடியும். அதேப்போன்று பொருளாதார இழப்பை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக எப்படி நீதிமன்றத்தை அணுக முடியும். அது சாத்தியம் கிடையாது,’ என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘புல்டோசர்கள் கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது,’ என உத்தரவிட்ட நீதிபதிகள், சட்டவிரோதமான    ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது உரிய சட்ட விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், எதுவாக இருந்தாலும் இறுதியில் சட்டத்தின் வழியில் தான் இருக்க வேண்டும். அதனால் கட்டிடங்கள் இடிப்பு விவகாரம் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்கவும் முடியாது,’ என தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.