தர்மசாலா: இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெறும் தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார்.
மத்திய அரசின் நிதி ஆயோக் சார்பில் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் அமைந்துள்ள பிசிஏ மைதானத்தில் தலைமைச் செயலாளர்களின் 3 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 2047-ம் ஆண்டில் நாட்டின்100-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான தொலைநோக்கு திட்டங்கள் மாநாட்டில் வரையறுக்கப்பட உள்ளன.
மேலும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, நகர்ப்புற நிர்வாகம், பயிர், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவது ஆகியவை குறித்தும் மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
தொழில் தொடங்க ஏதுவான சூழல், அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வது, பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்றுவது, மத்திய- மாநில அரசுகளுக்கான உறவை வலுப்படுத்துவது குறித்தும் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று தர்மசாலா சென்றார். திறந்த ஜீப்பில் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர்களை தூவி வாழ்த்தினர்.
மாநாட்டின் 2-ம் நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். இன்றும் அவர் மாநாட்டுக்கு தலைமை வகிக்கிறார். பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்து மாநாட்டில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
இன்று குஜராத் பயணம்
இமாச்சல பிரதேச பயணத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் பயணமாக இன்று குஜராத்தின் வடோதரா செல்கிறார். அந்த மாநிலத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.16,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கும் அவர் பூமி பூஜை நடத்துகிறார்.
மோடியின் தாயாருக்கு 100 வயது
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் குஜராத்தின் காந்தி நகரில் வசிக்கிறார். அவர் நாளை தனது 100-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அன்றைய தினம் குஜராத்தில் முகாமிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி காந்தி நகருக்கு சென்று தாயாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பூர்வீக கிராமமான குஜராத்தின் வாட் நகரில் ஹீரா பென்னின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன.