சர்க்கரை நோய் தீர சித்தர்கள் காட்டிய வழிபாடு; தஞ்சை அருகே அதிசயக் கோயில்!

நம்பிக்கையே சிறந்த மருந்து என்பார்கள் பெரியவர்கள். அவ்வகையில், கட்டுக்குள் அடங்காத சர்க்கரை நோயால் கஷ்டப்படும் அன்பர்களுக்கு, `நோய் தீரும்’ என்று நம்பிக்கை அளிக்கும் இடமாகத் திகழ்கிறது ஒரு சிவாலயம். அந்தக் கோயிலின் சிவலிங்க மூர்த்தம் கரும்பு வடிவில் திகழ்கிறது என்பது வியக்கவைக்கும் தகவல்! அது எந்தக் கோயில், அங்கே என்ன பரிகாரம்… எப்படிச் செய்ய வேண்டும்… தெரிந்துகொள்வோமா?

கோயில்வெண்ணி கரும்பேஸ்வரர்

கரிகால் சோழருக்கும் பாண்டியருக்கும் நடைபெற்ற வெண்ணிப் போர் சரித்திரப் பிரசித்திபெற்றது. இந்தப் போர் நடைபெற்ற இடம்தான் கோயில்வெண்ணி. தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் முற்காலப் பெயர் திருவெண்ணியூர். புலவர் வெண்ணிக் குயத்தியார் பிறந்த ஊரும் இதுதான் என்பார்கள்.

இங்குள்ள மிகத் தொன்மையான அருள்மிகு கரும்பேஸ்வரர் ஆலயம்தான் சர்க்கரை நோய்க்கான பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. சூரிய – சந்திர தீர்த்தங்கள், நந்தியாவர்த்தம் விருட்சம் என அழகுற அமைந்திருக்கிறது கரும்பேஸ்வரர் ஆலயம். அம்பாள் திருப்பெயர் அருள்மிகு சௌந்தரநாயகி. முசுகுந்தச் சக்கரவர்த்தியும், சோழன் கரிகாலனும் திருப்பணி செய்து மகிழ்ந்த ஆலயம் இது என்கிறது வரலாறு.

கரும்பு வடிவில் சிவலிங்கம்!

மூலவர் கருவறையில் கரும்பே உருவாய்க் காட்சி தருகிறது சிவலிங்கத் திருமேனி. ஆம்… ‘திருமேனி கரும்புக் கட்டுடைத்து’ என்று திருமூலர் பாடியுள்ளபடி, கரும்பேஸ்வரர் என்னும் பெயருக்கு ஏற்ப, கரும்புக் கட்டுகளைச் சேர்த்து வைத்தாற்போன்ற பாண அமைப்பைக் கொண்டவராம் இந்த மூலவர். அவருக்கு அபிஷேகம் செய்யும்போது, அந்த வடிவம் நமக்கு நன்றாகப் புலப்படுமாம்.

அதுமட்டுமா, கரும்பேஸ்வரர் சிவலிங்கத்தின் பாணம் அமைந் திருக்கும் ஆவுடை, நான்கு மூலைகளை உடைய சதுர வடிவமுடையது (சதுர் அஸ்த்ர வடிவம்) இதுபோன்ற திருவடிவம் அபூர்வமானது. வேறெங்கும் காண்பதற்கரியது என்கிறார்கள். மூலவர் கரும்பின் உருவமாக இருப்பதால், கைகளால் வேகமாகத் தேய்க்க முடியாத அமைப்பு என்பதால், அபிஷேகம்கூட ஒற்றி எடுப்பதுதானாம். இங்கே மூலவரையும் அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம்.

கஜலட்சுமி

வேறு என்ன சிறப்புகள் இந்த ஆலயத்துக்கு?

காவிரித் தென்கரையில் இது 102-வது தலம். சம்பந்தர் தனது பதிகத்தில் (இரண்டாம் திருமுறை) திருவெண்ணியூர் இறைவனை வணங்குபவர்களின் வினைகள் நீங்கும் என்றும், துன்பங்கள் அவர்களை அணுகாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் பதிகத்தில் இத்தல இறைவனை தலைதாழ்த்தி வணங்குபவர்களின் வினைகள் யாவும் நீங்கும் என்று குறிப்பிடுகிறார்.

இங்கே சர்க்கரை நோய்க்கான பரிகாரம் விசேஷம் ஏன் தெரியுமா?

சுந்தரர் தனது க்ஷேத்திரக் கோவைப் பதிகத்தில் (7-ம் திருமுறை, 47-வது பதிகம், 5-வது பாடல்) இத்தல இறைவனை `வெண்ணிக் கரும்பே’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பெயரில் கரும்பைக் கொண்டிருக்கும் இந்த ஈசன் சர்க்கரை நோய் தீர்க்கும் இறைவனாகவும் திகழ்கிறார். சர்க்கரை நோயால் பாதிப்புறும் அன்பர்கள் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டால், அவர்களுடைய அதிகப்படியான சர்க்கரையை ஈசன் எடுத்துக்கொள்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை! பாம்பாட்டி சித்தர் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்துப் பாடியுள்ளார்.

சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை வழிமுறை என்ன?

சித்தர்கள் பாடல்களில் இந்தக் கோயிலில் சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ரசமணியோடு வெல்லம் கலந்து, கோயிலை வலம் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால், குருதியில் சர்க்கரை குறையும்’ என்று காகபுஜண்டர் பாடியுள்ளார்.

ஆனால், இன்றைய சூழலில் ரசமணியை வாங்கிப் படைப்பது என்பது சாத்தியமல்ல. எனவே, மக்கள் தங்களால் இயன்றளவு ரவையை வாங்கி, வெல்லம் கலந்து, படைத்து வழிபடுகின்றனர். எறும்புகளுக்கு அது உணவாகிறது. இறைவன் அதை ஏற்று, சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பிக்கை. அதேபோல், அன்னதானத்துக்கு அரிசியும் வெல்லமும் வாங்கிக் கொடுத்தும், சுவாமியை வழிபடலாம் என்கிறார்கள்.

இங்கு பிள்ளை வரம் வேண்டியும் வழிபடலாம்…

அம்பாள் சௌந்தரநாயகி மழலைப் பேறு அருளும் மகா சக்தி. குழந்தைக்காகப் பிரார்த்திக்கும் பக்தர்கள், வளையல்களை வாங்கி வந்து அம்பாள் சந்நிதியில் கட்டிவிடுகின்றனர். பெண்கள் வளையல் சாத்தி வேண்டிக் கொண்டால் கண்டிப்பாகக் கருத்தரிப்பர் என்பது நம்பிக்கை.

நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் சென்று கரும்பேஸ்வரரை தரிசித்து வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையும் கரும்பாய் இனிக்க அருள்பாலிப்பார் அந்த ஈசன்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.