புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்றைக்கு ஆஜராகுவதில் இருந்து 3 நாட்கள் அவகாசம் கேட்ட ராகுல் காந்தியின் கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்றது. நேஷனல் ஹெரால்டு பங்கு விற்பனை தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. சோனியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு இருப்பதால், விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. அவரை வரும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.இந்நிலையில், ராகுல் காந்தியிடம் கடந்த புதன் கிழமை வரையில் தொடர்ந்து 3 நாட்கள் டெல்லி அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.நேற்று முன்தினம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் இன்றும் விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுலுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் கொடுத்தனர்.இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை 20 மணி நேரத்துக்கு மேல் விசாரித்தது. 4வது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது. இதனிடையே, அமலாக்கத் துறைக்கு ராகுல் நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வரும் எனது தாயார் சோனியா காந்தியை கவனித்து கொள்ள வேண்டியுள்ளது. அதனால், நாளை (இன்று) விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவகாசம் வழங்க வேண்டும். 20ம் தேதி ஆஜராக தயாராக இருக்கிறேன்,’ என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்றைக்கு ஆஜராகுவதில் இருந்து 3 நாட்கள் அவகாசம் கேட்ட ராகுல் காந்தியின் கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்றது. இதையடுத்து ராகுல் காந்தி எதிர் வரும் திங்கட்கிழமை ஆஜராகி 4வது முறையாக ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். ஒன்றிய அமைச்சர்களுக்கு நோட்டீஸ் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்ட 3 நாட்களும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நேற்றும் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே அமலாக்கத்துறை அதிகாரிகள் வரம்பை மீறி செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜ்ஜுவுக்கு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக எல்லைமீறும் அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.