இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்கு ரசிகர்களிடம் இப்போதிருந்தே எதிர்பார்ப்பு எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று 11 மணிக்கு படம் குறித்த அப்டேட் வெளியாகும் என ட்விட்டரில் அறிவித்திருந்தனர். என்ன அப்டேட் ஆக இருக்கும் என நாம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள் இவை.
இன்று 11 மணிக்கு Thalaivar 169 எனக் குறிப்பிடப்படுகிற ரஜினி நடிக்கும் 169-வது படத்தின் டைட்டில் என்ன என்பதையும் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்பதையும் சன் பிக்சர்ஸ் அறிவிக்கலாம் எனச் சொல்கிறார்கள். அடுத்தடுத்து படம் பண்ணுவதற்கு சன் பிக்சர்ஸ் சார்பில் 10 படத்தின் பெயர்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கிறதாம். அதில் ஏதாவதொன்றாக இந்தப் படத்தின் டைட்டில் இருக்கலாம். ஏற்கெனவே `ஜெயிலர்’, `கிரிமினல்’ மற்றும் `சாம்ராட்’ உள்ளிட்ட டைட்டில்கள் விவாதிக்கப்பட்டன. சாம்ராட் என்கிற டைட்டிலுக்கு அதிக வாய்ப்பு உண்டு. இல்லையெனினும் `பீஸ்ட்’ என்பது போல புதிய ஒன்றாகக்கூட இருக்கலாம்.
நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான `பீஸ்ட்’ திரைப்படம் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்ததால் இந்தப் படத்தில் நெல்சன் உடன் திரைக்கதையில் பங்காற்ற கே.எஸ்.ரவிக்குமார் படத்திற்குள் வந்திருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது `கே.எஸ்.ரவிக்குமார் நடிக்க தாங்க வந்தாரு. திரைக்கதையில் அவர் பணியாற்றப் போவதில்லை’ என்றும் சொல்லப்படுகிறது.
Thalaivar 169 படத்தில் நெல்சனின் வழக்கமான காமெடி கேங்கான ரெடின் கிங்ஸ்லி, `கிலி’ சிவா அரவிந்த், `மாகாளி’ சுனில் ரெட்டி ஆகியோருடன் யோகி பாபுவும் இணைகிறார். இன்னொரு சர்ப்ரைஸ் ஆக கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ்ராஜ்குமார் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறாராம். ஜஸ்வர்யா ராய் படத்தில் நடிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கின்றனர்.
`அண்ணாத்த’ படப்பிடிப்பு நடந்த ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு எப்போது, படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.