சென்னை: பாரத் கவுரவ் திட்டத்தின்கீழ், 2-வது தனியார் ரயில், மதுரையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் சங்கமத்துக்கு ஜூலை 23-ம் தேதி புறப்படுகிறது.
கோயம்புத்தூரில் இருந்து சீரடிக்கு தனியார் சிறப்பு ரயில் கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2-வது தனியார் ரயில் சேவை மதுரையில் இருந்து பிரயாக்ராஜ் சங்கமத்துக்கு ஜூலை 23-ம் தேதி இயக்கப்படுகிறது.
மதுரையில் புறப்படும் சிறப்பு ரயில், பூரி, கொல்கத்தா, கயா, வாரணாசிக்கு செல்லும். மறுமார்க்கத்தில் விஜயவாடா, சென்னை வழியாக மதுரை வரவுள்ளது.
‘பாரத் கவுரவ்’ திட்டத்தின் கீழ், இந்த சிறப்பு ரயிலை டிராவல் டைம்ஸ் (இந்தியா) என்ற தனியார் நிறுவனம் இயக்கவுள்ளது. இந்த ரயிலில் 6 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், 7 தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு உணவு தயாரிக்கும் இடம் உட்பட 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்று இடங்களை இந்திய, வெளிநாட்டு மக்கள் கண்டுகளிக்கும் வகையில் ‘பாரத் கவுரவ்’ ரயில் திட்டம் கடந்த ஆண்டு நவ.23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ், தனியார் ரயில் இயக்க தெற்கு ரயில்வேயில் 8 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அதில் 2 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.