தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனிடம் போனில் சாதி ரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை போனில் சாதி ரீதியாக பேசியதை ஆடியோ பதிவு செய்து வெளியிட்ட மாணவனை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி. இவர் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர் முனீஸ்வரனிடம் சாதி ரீதியாக பேசியதாகவும் பட்டியல் இனத்தவர் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் ஆடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
குளத்தூரில் அரசு மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, மாணவர் முனீஸ்வரன் உடன் செல்போனில் பேசியதாக வெளியான ஆடியோவில், அவர் மாணவனிடம் சாதி குறித்து கேட்பது மட்டுமின்றி பள்ளியில் சில ஆசிரியர்களின் பெயரை சொல்லி இவர்களை பிடிக்குமா என்று கேட்க, அந்த மாணவரும் ஆசிரியர்களை பிடிக்கும் என்று சொல்ல தொடர்ந்து பேசுகிறார்.
அதில் மாணவரின் ஊரான புளியங்குளத்தை சேர்ந்தவர்களை சில ஆசிரியர்கள் பள்ளியில் சேர்க்க கூடாது என்று கூறுவதாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஆசிரியர்கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் அவர்கள் கையில் சென்று விடும் என்று தான் குறிப்பிட்ட சாதி, நீயும் குறிப்பிட்ட சாதி என்று கூறிய ஆசிரியை, மாணவரிடம் பட்டியல் இனத்தவர் மீது வெறுப்பை விதைக்கும் விதமாகப் பேசுகிறார். ஆனால், அதற்கு அந்த மாணவன் எல்லோரும் சமம்தானே டீச்சர் என்று கூறுகிறார்.
அதோடு, பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் மாணவரின் ஊரைச் சேர்ந்தவர்கள் போட்டியிட வேண்டும் என்றும், சில ஆசிரியர்கள் சரியாக இருப்பதில்லை; பள்ளியில் நடைபெறவுள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தல் தொடர்பாக மாணவரிடம் ஆசிரியை பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவி சர்ச்சையானது.
இது குறித்து ஊடகங்கள் சம்பந்தப்பட்ட உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வியிடம் கருத்து கேட்டதற்கு, “அது என்னுடைய ஆடியோ இல்லை, எடிட் செய்துள்ளனர், நால் நல்ல முறையில் பாடம் நடத்துவேன், மாணவர்கள் என்ன சாதி என்று கூட தெரியாது, மாணவர்களிடம் கண்டிப்பாக இருப்பேன், தன்னை பிடிக்காதவர்கள் இது போல செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் புவிராஜ், மாவட்ட தலைவர் காசி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரான கலைச்செல்வி என்பவர் தன் பள்ளியில் பயிலும் மாணவனிடம் சாதியை தூண்டும் வகையிலும், பள்ளியில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர் தலைவராக வந்து விடக்கூடாது என்று சாதிய வன்மத்துடன் பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்கு உரியது. மாணவர்கள் மத்தியில் தீண்டாமையை விதைக்கும் வகையில் பேசிய குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி. உறுதுணையாக இருந்த கணினி ஆசிரியை மீனா ஆகியோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையானதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தினார். இதையடுத்து, மாணவனிடம் சாதி ரீதியாக போனில் பேசிய, உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, கணினி ஆசிரியை மீனா ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, பள்ளியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஆசிரியை போனில் சாதி ரீதியாகவும் சாதி உணர்வைத் தூண்டும் விதமாகப் பேசியதை பதிவு செய்து ஆடியோ வெளியிட்டு அம்பலப்படுத்திய மாணவன் முனீஸ்வரனுக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளர் எஸ்.கே.பி. கருணா, அந்த ஆடியோவில், ஆசிரியை சாதி ரீதியாகப் பேசினாலும் அதற்கு எல்லோரும் சமம்தானே என்று கூறிய மாணவனை எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் அச்சாணி என்று பாராட்டியுள்ளார்.
இது குறித்து எஸ்.கே.பி. கருணா தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லாருமே சமம்தானே டீச்சர்” என்ற அந்த அரசுப்பள்ளி மாணவன் தான் எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் அச்சாணி. அப்படியான தலைமுறையை உருவாக்குவது மட்டுமே நமது கடமை. அரசின் பொறுப்பு.
ஒரு சாதிய வன்மம் கொண்ட உரையாடலின் நடுவே அதை இயல்பாக எடுத்துச் சொன்ன அந்த மாணவனுக்கு அன்பும், வாழ்த்துகளும்.” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“