இனி நிரந்தரமாகிறது இந்த தற்காலிக சென்னை போக்குவரத்து மாற்றங்களெல்லாம்! முழு விவரம்

சென்னையின் முக்கிய பிரதான சாலைகளில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்ற சோதனைகள், தற்போது நிரந்தர போக்குவரத்து மாற்றங்களாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அப்படி நிரந்தரமாக்கப்பட்ட சில மாற்றங்களின் முழு விவரம் இங்கே!
சென்னை போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு வகையிலான திட்டங்கள், போக்குவரத்து மாற்றங்களை கொண்டு வந்து சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சென்னையின் முக்கிய பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
image
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
சென்னை புரசைவாக்கம் ஈ.வே.ரா சாலையில் உள்ள தாசபிரகாஷ் சந்திப்பில் காலை நெரிசல் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டியும், வாகன ஓட்டிகளின் நன்மை கருதியும் கடந்த 22.05.2022 முதல் காலை 9 மணி முதல் 11 மணி வரையில், தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈவேரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதன்படி போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நாளை (18.06.2022) முதல் காலை 9 மணி முதல் 11 மணி வரையில் தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈ.வே.ரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. ஈவேரா சாலை – நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து டாக்டர் அழகப்பா சாலை வழியாக செல்ல இயலாது.
image
புரசைவாக்கத்திலிருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெரு வழியாக செல்லும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி ராஜா அண்ணாமலை சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் கங்காதீஸ்வரர் கோயில் தெரு மற்றும் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி டாக்டர் அழகப்பா சாலை, வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் வலது புறமாக திரும்பி டாக்டர் நாயர் பாயின்ட் சந்திப்பில் வலது மற்றும் இடது புறமாக திரும்பி அல்லது நேராக செல்லலாம்.
இதையும் படிங்க… வாகன ஓட்டிக்கு Hi-Fi கொடுத்த கரடி.. வைரலாகும் க்யூட் வீடியோ!
இதைப்போல, சென்னை சேத்துப்பட்டு மெக்கானிக்கல் சாலையில் உள்ள சேத்துப்பட்டு சந்திப்பில் மாலை நெரிசல் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டியும், வாகன ஓட்டிகளின் நன்மை கருதியும் சோதனை ஓட்டம் 22.05.2022 முதல் நடத்தப்பட்டது. இதன்படி போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளது.
image
இதனால் 18.06.2022 அன்று முதல் மாலை 6 மணி முதல் 8 மணி வரையில் நிரந்தர போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மாலை 6 மணி முதல் 8 மணி வரையில் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பு வழியாக நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்பர்டாங்க் சாலை செல்லும் வாகனங்கள், சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் நேராக மற்றும் வலது புறம் திரும்ப அனுமதி இல்லை.
அத்தகைய வாகனங்கள் சேத்துப்பட்டு சந்திப்பில் இடது புறமாக திரும்பி மெக்கானிக்கல் சாலை, டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் கீழ் பகுதி சாலை வழியாக சென்று மறுபடியும் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை மற்றும் மெக்கனிக்கல் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்பிற்கு செல்லலாம்.
image
இதைபோல, ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் பாயிண்ட் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது இதன்படி போக்குவரத்து பெருமளவில் குறைந்துள்ளதால் 18.06.2022 அன்று முதல் நிரந்தர போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
அதன்படி பிள்ளையார் கோயில் தெரு எம்.ஜி.ஆர் நகரில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மேற்கு சைதாப்பேட்டை மற்றும் கிண்டி செல்ல விரும்பும் வாகனங்கள் காசி பாயிண்ட் சந்திப்பில் இடதுபுறம் திருப்பிச் சுமார் 150 மீட்டருக்கு சென்று கே.கே.நகர் RTO அலுவலகம் முன் “U” திருப்பம் மூலம் தங்கள் இலக்கை அடையலாம். பிள்ளையார் கோயில் தெரு மேற்கு சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் கனரக வாகனங்கள் தவிர கே.கே.நகர் வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல விரும்பும் வாகனங்கள் காசி பாயிண்ட் சந்திப்பில் இடது புறம் திருப்பிச் சுமார் 160 மீட்டருக்கு சென்று காசி மேம்பாலம் அடியில் “U” திருப்பம் மூலம் தங்கள் இலக்கை அடையலாம்.
image
அசோக்நகர் 12வது அவென்யூ வழியாக வரும் கனரக வாகனங்கள் கே.கே.நகர், வடபழநி மற்றும் கோயம்பேடு செல்ல விரும்பும் வாகனங்கள் வலது புறம் திரும்பி நாகாத்தம்மன் கோவில் தெரு வழியாக அசோக் நகர் 11வது அவென்யூக்கு சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
சென்னை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கடந்த 28.04.2022 முதல் Toyoto Show Room அருகில் போக்குவரத்து மாற்றம் பரிசோதனை செய்யப்பட்டது. இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் நல்வரவேற்பை பெற்றுள்ளதாலும் நந்தனம் சந்திப்பு மற்றும் பாரதிதாசன் சாலையில் போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் சீராக செல்வதால் போக்குவரத்து மாற்றங்கள் 18.06.2022 முதல் நிரந்தரமாக செயல்படுத்தப்படுகின்றன.
சென்னை: நந்தனம் சிக்னல் அருகே சோதனை முறையில் 10 நாட்களுக்கு போக்குவரத்து  மாற்றம் | Chennai Traffic change for 10 days in test mode near Nandanam  signal | Puthiyathalaimurai - Tamil ...
அதன்படி தி.நகர் வெங்கட நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்லவிருக்கும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பில் இடது புறம் திரும்பி சுமார் 200 மீட்டர் தூரம் சென்று Toyoto Show Room அருகில் ‘U’ திருப்பம் செய்து தாங்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு செல்லலாம். செனடாப் சாலையிலிருந்து தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை செனடாப் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி சுமார் 250 மீட்டர் தூரம் சென்று Toyoto Show Room அருகில் ‘U’ திருப்பம் செய்து தாங்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு செல்லலாம்.
பாரதிதாசன் சாலையிலிருந்து அண்ணாசலை- தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் பாரதிதாசன் சாலையில் இடது புறம் திரும்பி சுமார் 300 மீட்டர் தூரம் சென்று Toyoto Show Room அருகில் ‘U’ திருப்பம் செய்து தாங்கள் செல்லவிருக்கும் இடத்திற்கு செல்லலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– செய்தியாளர்: சுப்பிரமணியன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.