புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் வன்முறைகளை சுட்டிக்காட்டி, ரயில்களை எரிப்பவர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவர்கள் என்று முன்னாள் தளபதி விபி மாலிக் தெரிவித்துள்ளார்.
கார்கில் போரின் போது இந்திய ராணுவத்தை வழிநடத்தி வெற்றி பெற்றுத்தந்தவர் விபி மாலிக். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்தப் பேட்டியில், “ராணுவம் என்பது தன்னார்வப் படை. அது ஒன்றும் நலவாரியம் அல்ல. அதில் இருப்பவர்கள் அனைவரும் தேசத்துக்காக போராடும் சிறந்த வீரர்களாக இருக்க வேண்டும். தேசத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டு ரயில்கள், பேருந்துகளை எரித்து சேதத்தை ஏற்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவர்களாவர்.
ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கு புதிய நடைமுறையை அறிவித்துள்ளதால் சிலருக்கு வயது வரம்பு மீறியிருக்கலாம். அதனால் அவர்கள் விரக்தியில் இருக்கலாம். அது நியாயமானதே. அதற்கு அரசாங்கம் தீர்வு காணும். மேலும் அக்னி பாதை வீரர்கள் காவல்துறை, துணை ராணுவத்தில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது. அதுபோல் நிறையபேர் தனியார் துறையிலும் வேலையில் சேரலாம். இப்போதே அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய இயலாது. 4 ஆண்டுகள் சேவைக்குப் பின்னரே அந்த வேலைவாய்ப்புகள் உருவாகும். அக்னி பாதை திட்டத்தில் நிறைய சாதகமாக விஷயங்கள் உள்ளன. தற்போது இளைஞர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை அரசு நிச்சயமாக பரிசீலிக்கும்.
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணி என்பதால் உயர் தொழில்நுட்ப சேவைகளில் இருப்போரை விரைவில் வெளியேற்ற நேரிடுமே என்று நினைப்பதைவிட அடுத்துவருபவர்கள் இன்னும் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றறிந்து வருவார்கள் என்றே பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஐடிஐ இன்னும் பிற தொழில்நுட்பக் கல்விகளைப் பயில்வோருக்கு நல்ல வாய்ப்பு கிட்டும். அக்னி பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வரட்டும். அது நடைமுறைக்கு வந்தபின்னர் சில சிக்கல்கள் புரியவரும். அதற்கேற்ப அரசு திருத்தங்களை கொண்டுவரட்டும்” என்று கூறினார்.
மத்திய அமைச்சரும், மற்றொரு முன்னாள் தளபதியுமான விகே சிங், திட்டத்தைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. அது நடைமுறைக்கு வந்தபின்னரே அதன் சாதக, பாதகங்களை அறிய முடியும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்னி பாதைக்கு எதிர்ப்பு ஏன்: ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தொகையுடன் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னி பாதை திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த புதிய கொள்கையை பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னி பாதை திட்டத்தை திரும்பபெறக் கோரி பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.