ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமாகியுள்ள சூழலில், அத்திட்டத்தில் நடப்பாண்டு சேருவோருக்கான வயது வரம்பை 23-ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்திய ராணுவத்தில் அதிகப்படியான இளைஞர்களை சேர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டம் அக்னிபாத். இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டுகால பணிக்கு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல்கட்டமாக, 43 ஆயிரம் இளைஞர்களை இத்திட்டத்தின் கீழ் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான வயது வரம்பு 17.5 முதல் 21 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்த திட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ராணுவ வீரர்களுக்கு இருக்கும் எந்தவித பணிக்கொடையும், சலுகையும் அக்னி வீரர்களுக்கு இல்லை என்றும், இந்த திட்டத்தை கைவிட்டு தற்போது இருக்கும் நடைமுறையின் படியே ராணுவத்தில் ஆள்சேர்ப்பு இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில், இந்தப் போராட்டங்களின் எதிரொலியாக அக்னிபாத் திட்டத்தில் மத்திய அரசு ஒருமுறை திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அதன்படி, நடப்பாண்டு அக்னிபாத் திட்டத்தில் சேருவோருக்கான அதிகபட்ச வயது வரம்பை 21-இல் இருந்து 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள் சேர்ப்பு நடத்தப்படாததால் இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், அக்னிபாத் திட்டத்தில் இணைந்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் வெளிவருபவர்களுக்கு ரூ.11 லட்சம் வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் திட்டமும் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM