கணவர் ஆண்மையற்றவர் என பொய்ச் சொல்வது…! – உயர் நீதிமன்றம் அதிரடி

“தனது கணவர் ஆண்மையற்றவர் என ஒரு பெண் பொய்யாக குற்றம்சாட்டுவது கொடுமைக்கும், சித்ரவதைக்கும் சமமானது” என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவியை சேர்ந்த ஒரு இளைஞர் அங்குள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “உறவினர்கள் அனைவரின் முன்னிலையிலும் எனது மனைவி என்னை ஆண்மையற்றவன் எனக் கூறி வருகிறார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர் இதை கூறுவதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இவ்வாறு எனது மனைவி கூறுவதை என்னை கொடுமைப்படுத்துவது போல உள்ளது. எனவே அவரிடம் இருந்து எனக்கு விவகாரத்து வேண்டும்” எனக் கோரியிருந்தார். இதனை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
image
இதனை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “ஒரு நபரை எந்த மருத்துவ ஆதாரமும் இல்லாமல் அவரது மனைவி ஆண்மையற்றவர் என உறவினர்கள் முன்னிலையில் கூறுவது மிகக் கொடுமையான ஒன்று. இது அந்த கணவரின் மரியாதையை குலைப்பதுடன் மட்டுமல்லாமல் அவருக்கு கடுமையான மன வேதனையையும், வலியையும் ஏற்படுத்தும். ஒரு நல்ல பெண்மணி இவ்வாறான பொய் குற்றச்சாட்டை ஒருபோதும் கூற மாட்டார். ஆண்மையற்றவர் என பொய் குற்றச்சாட்டை வைப்பது என்பது நிச்சயம் கொடுமைப்படுத்துதலுக்கு நிகரான ஒன்றுதான். இந்து திருமணச் சட்டம் 13 (1) பிரிவு இதனை உறுதி செய்கிறது. எனவே, கணவரை ஒரு மனைவி உறவினர்கள் முன்னிலையில் ஆண்மையற்றவர் என பொய்யாக குற்றம்சாட்டினால், அந்தக் கணவர் ‘கொடுமைப்படுத்துதல்’ என்ற அடிப்படையில் விவகாரத்து கோரலாம்” எனத் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.