புதுடெல்லி: கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தியின் உடல்நிலை பற்றி காங்கிரஸ் தலைமை விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸ் இடைக்கால் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே வேளையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 8ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், தொற்று பாதிப்பால் அவரால் ஆஜராக முடியவில்லை. அதனால், கூடுதல் அவகாசம் கோரினார்.அதன்படி, வரும் 23ம் தேதி ஆஜராகும்படி அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி கடந்த 12ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு டெல்லி கங்காராம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் ஜூன் 12ம் தேதி சோனியாவுக்கு மூக்கில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனியா காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோனியா காந்தியின் சுவாச மண்டலத்தில் பூஞ்சை தொற்று பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.