புது டில்லி: ”அனுமதியில்லாத இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு, பரிசு வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளேன்,” என, மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
புது டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: நாட்டில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நான்கு பேர் அடங்கிய குடும்பத்தில் ஆறு வாகனங்கள் உள்ளன. மக்கள் வாகனங்களை நிறுத்துவதில் காட்டும் அலட்சியத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதுடில்லியில் சாலைகள் மிக அகலமாக உள்ளதால், பலரும் தங்கள் வாகனங்களை வீட்டுக்குள் நிறுத்தாமல், சாலையோரத்தில் நிறுத்துகின்றனர்.
இதுபோல், அனுமதியில்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க, ஒரு திட்டம் வைத்துள்ளேன். இத்தகைய இடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு ௧,௦௦௦ ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். அனுமதி இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை புகைப்படம் எடுத்து போலீசுக்கு அனுப்புவோருக்கு, ௫௦௦ ரூபாய் பரிசளிக்க வேண்டும். இதை செயல்படுத்தும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வர ஆலோசித்து வருகிறேன். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.
Advertisement