புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, விரைவில் அக்னி பாதை திட்டத்தின் கீழ் முதல் பேட்ச் ஆள் சேர்ப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இளைஞர்கள் அனைவரும் அக்னி வீரர்களாக இணைய வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறாததால் வாய்ப்புகளை இழந்த இளைஞர்களின் நலனுக்காக அரசாங்கம் வயது வரம்பை 23 ஆக அதிகரித்துள்ளது. இது இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தொகையுடன் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னி பாதை திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
இந்த புதிய கொள்கையை பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னி பாதை திட்டத்தை திரும்பபெறக் கோரி பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பிஹார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியாணா, தெலங்கானா என 7 மாநிலங்களிலும் போராட்டங்கள் பரவிவுள்ளது.
அக்னி பாதை ஆள்சேர்ப்பு முறை:
> அக்னி பாதை திட்டத்தில் 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் முப்படைகளில் சேரலாம். தற்போதைய கல்வித் தகுதி, உடற்தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். இந்த ஆண்டு வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
> புதிய திட்டத்தில் பணியில் சேருவோர், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
> முதல் 6 மாதங்கள் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். முதலாம் ஆண்டு ரூ.30,000, இரண்டாம் ஆண்டு ரூ.33,000, மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும். ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப்படும். மீதமுள்ள 70 சதவீதம் மட்டும் வழங்கப்படும். பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பதக்கம், விருதுகள் அனைத்தும் அக்னி வீரர்களுக்கும் வழங்கப்படும்.
> நான்கு ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு, வீரர்களின் பங்களிப்பு தொகை ரூ.5.02 லட்சம், அரசு அளிக்கும் அதே தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்த தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். பணிக் காலத்தில் ரூ.48 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.
> அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. எனினும் அவர்கள் தொழில் தொடங்குவதற்கு கடன் வசதி ஏற்பாடு செய்யப்படும். அடுத்த பணிக்கு செல்வதற்கு ஏதுவாக திறன் சான்று, உயர் கல்வியில் சேருவதற்காக கல்விச் சான்று வழங்கப்படும்.
> உயிரிழப்பு ஏற்பட்டால் கூடுதலாக ரூ.44 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பணியின்போது காயமடைந்து 100 சதவீத மாற்றுத் திறனாளியானால் ரூ.44 லட்சம், 75 சதவீதத்துக்கு ரூ.25 லட்சம், 50 சதவீதத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.