அப்துல் ரஹ்மானை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க நடவடிக்கை: இந்திய – அமெரிக்க முயற்சிக்கு தடை போட்ட சீனா

நியூயார்க்: லஷ்கர் இ தோய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தின் உறவினரும், அமெரிக்காவை மிரட்டிய தீவிரவாதியுமான அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க இந்தியாவும், அமெரிக்காவும் எடுத்த நடவடிக்கையை சீனா கடைசி நேரத்தில் தடுத்து விட்டது.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ‌க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. புல்வாமா தாக்குதல், நாடாளுமன்ற வளாக தாக்குதல்களில் தொடர்புடைய ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்குமாறு, ஐ.நா. அமைப்பிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அசாரை, சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஆதரவு அளித்தன. இருந்தபோதிலும், சீனா மீண்டும் மீண்டும் மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா-சீனா இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. சீனா விதித்து வந்த மறுப்பை நீக்கிக்கொண்டதால் மசூத் அசார் தீவிரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மீது மசூத் அசார் தாக்குதல் நடத்தினார். புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 44 வீரர்கள் உயிர்நீத்தனர். இதைத்தொடர்ந்தே மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தாவை சேர்ந்தவரும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதியுமான அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க ஐ.நா.வில் இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டாக தீர்மானத்தை முன்மொழிந்தன.

மக்கி அமெரிக்காவால் ஏற்கெனவே தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அங்கு பல்வேறு நாச செயல்களை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு, தீவிரவாத அமைப்புக்கு பணம் திரட்டுவது தடை செய்யப்பட்டது. மக்கி, லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்தின் மைத்துனர் ஆவார். ஆனால் சீனா கடைசி நிமிடத்தில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிறுத்தியது.

2017- இல் இந்தியா உள்ளிட்ட 3 நாடுகள் இதேபோன்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினரான சீனா தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.