”கட்சியை நம்பி ஒப்படைத்த சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி தற்போது ஓ.பன்னீர்செல்வத்தையும் நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்” எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் தனியரசு.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தலைவர் தனியரசு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தனியரசு, ”என்னுடைய ஆதரவு ஓபிஎஸ்-க்குதான். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல சோதனைகளை சந்தித்து. இரட்டை தலைமை இறுதி ஆன பிறகு, தனக்கான நிலைகளை எல்லாம் விட்டு கொடுத்து அதிமுக கட்சி செயல்பட துணை நின்றவர் ஓபிஎஸ். சுயநலம் இல்லாமல் செயல்பட்டவர் ஓபிஎஸ்.
கட்சியை நம்பி ஒப்படைத்த சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி தற்போது ஓபிஎஸ் அவர்களையும் நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அனைத்து இடங்களையும் விட்டு கொடுத்த ஓபிஎஸ் இந்த நேரத்தில் விட்டு கொடுக்க கூடாது என அவரிடம் தெரிவித்து உள்ளேன். இரட்டை தலைமை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது பொது குழுவில் ஒற்றை தலைமை என்ற பெயரில் ஓபிஎஸ் அவர்களை நீக்க முயற்சி செய்கின்றனர்.
கட்சியை விட்டு நீக்கிய சசிகலா, தினகரன் போன்றவர்களை இணைக்க வேண்டும் என நாங்கள் தெரிவித்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தற்போது இதுபோன்று செயல்படுகிறார். எனவே இந்த முறை விட்டுக்கொடுக்கக் கூடாது என தெரிவித்தேன். அவரும் இந்த விஷயத்தில் விட்டு கொடுக்க மாட்டேன் என தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சசிகலா, தினகரன்,அன்வர் ராஜா போன்றவர்களை நான் சந்திக்கவுள்ளேன். ஒற்றை தலைமை வந்தாலும் ஓபிஎஸ் தான் தலைமை இடத்திற்கு வர வேண்டும். பகைவரை கூட மன்னித்து அரவணைத்து செயல்பட கூடியவர் ஓபிஎஸ்” என அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாம்: “இதை செய்தால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும்” – வைத்திலிங்கம் எச்சரிக்கைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM