திண்டுக்கல்: JCB, Hitachi வாகனங்களை அசால்ட்டாக இயக்கி ஆச்சர்யமூட்டும் இரண்டரை வயது சிறுவன்

திண்டுக்கல் அருகே JCB, Hitachi வாகனங்களை சர்வ சாதாரணமாக இயக்கி ஆச்சரியப்படுத்துகிறார் பால்வாடி செல்லும் இரண்டரை வயது பாலகன்.
திண்டுக்கல் அடுத்துள்ளது குட்டத்துப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மனைவி ரோனிகா மேரி. இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயது மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. தாமஸ் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் மற்றும் பழுதுபார்க்கும் தொழில் செய்துவருகிறார். இவரது கம்பெனியும், வீடும் ஒரே இடத்தில் உள்ளது.  இவர்களது இரண்டரை வயது மகன் “கோல்டன் ஸ்டோவின், தவழும் வயதிலிருந்தே வீட்டின் சுவற்றை பிடித்துக்கொண்டு அருகில் உள்ள தனது தந்தையின் தொழிற்சாலைக்கு செல்வது வழக்கம்.
பின்னர் நடை பழகிய உடன் தனியாக நடந்துசென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விவசாய எந்திரங்களில் ஏறி அமர்ந்துகொண்டு விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறான். ஒருகட்டத்தில் தந்தை ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்களை இயக்குவது, வேலை பார்ப்பது போன்றவற்றை கவனித்த சிறுவன் அந்த வாகனங்களை தானும் இயக்குவேன் என்று அடம் பிடிக்கவே வேறுவழியின்றி தந்தை தாமஸ் தனது மடியில் வைத்துக்கொண்டு வாகனங்களை இயக்கி உள்ளார்.
image
இதையெல்லாம் கவனித்த சிறுவன் நாளடைவில், “சிறு கன்று பயம் அறியாது ” என்ற பழமொழிக்கு ஏற்ப தானாகவே நடந்து சென்று தொழிற்சாலையில் நிற்கும் ஜேசிபி, ஹிட்டாச்சி வாகனங்களில் தானாகவே ஏறி இயக்க முயற்சித்துள்ளார். இதனை கவனித்த தாமஸ் தனது மகனுக்கு பயிற்சி அளிக்க தொடங்கி உள்ளார். ’’தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’’ என்பது போல் தந்தை சொல்வதைக் கேட்டு சிறுவனும் இயந்திரங்களை லாவகமாக இயக்கி உள்ளார்.
image
தற்பொழுது இரண்டரை வயது சிறுவன் தனது பிஞ்சு கைகளினால் ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி வாகனங்களை இயக்கி, தனது வீட்டின் எதிர்புறம் உள்ள காலி நிலத்தை சமன் செய்து வருகிறார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். கோல்டு ஸ்டோவனின் பெற்றோர் கின்னஸ் சாதனையில் தனது குழந்தையை இடம்பெறச் செய்யவேண்டும் என்பதற்காக தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதாக தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். மோட்டார் வாகன சட்டப்படி 18 வயது நிரம்பியவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்ற பின்னரே எந்த ஒரு வாகனத்தையும் இயக்க முடியும் என்பது சட்ட விதி. இருப்பினும் இரண்டரை வயதில் இந்த சிறுவன் கனரக வாகனத்தை இயக்குவது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.