தென் மாவட்ட அதிமுகவினர் யார் பக்கம்? – அணி திரட்டும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள்

மதுரை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் ஏற்பட்டுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் பொதுக்குழுவிற்கு முன் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் தங்கள் அணிக்கான ஆதரவை திரட்டி கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டாலும், அதன்பிறகு ஓபிஎஸ் – இபிஎஸ் அணியினர் இணைந்து ஒருங்கிணைந்த அணியாக செயல்பட்டனர். அமமுக தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார் டிடிவி தினகரன். சசிகலா இன்னும் வெளிப்படையான அரசியலில் களம் இறங்கவில்லை. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வமும், கே.பழனிசாமியும் கட்சி நிகழ்ச்சிகளில் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுவதாக அவர்கள் கூறிக் கொண்டாலும், திரைமறைவில் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வந்தனர்.

இருவருக்குமான அந்த கோஷ்டிபூசல் தற்போது ஒற்றைத் தலைமை கோஷம் விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டங்களில் கடந்த காலம் முதலே நிர்வாகிகள் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டனர். மதுரை அரசியல் கள நிலவரம், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அதற்கு திமுக, அதிமுக வரலாற்றில் மதுரையில் நடந்த கடந்த கால அரசியல் நிகழ்வுகளே சான்றாக உள்ளது.

அதனால், மதுரை நிர்வாகிகளின் மனமாற்றம், நடவடிக்கைகளை திமுக, அதிமுக கட்சி மேலிடங்கள் ரகசியமாக கண்காணிக்கும். அந்த வகையில் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகியோரில் யாருக்கு மதுரை அதிமுகவினரின் ஆதரவு? – இந்தக் கேள்வி கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட அதிமுகவில் அதிகாரமிக்க நபர்களாக தற்போது முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் உள்ளனர். மூவருமே மாநகர, புறநகர் மாவட்டச் செயலாளர்களாக உள்ளனர். மூவரும் உள்ளுக்குள் எதிரெதிர் துருவங்களாக செயல்படுவார்கள். ஆனால், வெளிப்படையாக கட்சி நிகழ்ச்சிகளில் அண்ணன், தம்பிகள் போல் உரிமையாக நட்பு பாராட்டுவார்கள்.

ஆரம்பத்தில் மூவருமே இபிஎஸ் ஆதரவாளர்களாக தங்களை காட்டிக் கொண்டனர். முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், தெற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ-கள் சரவணன், மாணிக்கம், முத்துராமலிங்கம், முன்னாள் மண்டலத் தலைவர் சாலைமுத்து உள்ளிட்ட விரல் விட்டு எண்ணிக்கூயடிவர்களே மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக செயல்பட்டனர். இவர்களில் ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுக்காததால் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுகவிற்கு சென்றுவிட்டார். முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாஜகவிற்கு சென்றுவிட்டார். சாலைமுத்து தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிவிட்டார்.

இப்படி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மதுரையில் ஆரவாரமில்லாமல் உள்ளார்கள். தற்போது ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்தநிலையில் மதுரை மாவட்ட செயலாளர்கள் அடிப்படையில் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார், கிழக்கு மாவட்டச் செலயாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் இபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். இருவரும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் மடத்திலும் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால், செல்லூர் கே.ராஜூ மட்டும் தற்போது மவுனமாக இருக்கிறார்.

இதுகுறித்து அதிமுகவினர் கூறும்போது, ”தென் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு பெருமளவு கே.பழனிசாமிக்கு உள்ளது. மற்ற நிலை நிர்வாகிகள் ஆதரவும் அதேநிலையில்தான் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெளிப்படையாக கே.பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த கிழக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வெளிப்படையாக யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்கவில்லை. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆரம்பத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்தார். தற்போது கே.பழனிச்சாமி ஆதரவாக உள்ளார்.

தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக உள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு மாவட்டச் செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் யாருக்கும் ஆதரவு இல்லாமல் நடுநிலைபாட்டை கடைபிடிக்கின்றனர். சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ, எந்த அணியையும் சாராமல் உள்ளார்.

எந்த ஆதரவு நிலைபாடும் வெளிப்படையாக அறிவிக்காத மாவட்டச் செயலாளர்கள் பொதுக்குழு, அதன்பிறகான செயல்பாடுகளில் கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரில் யார் செல்வாக்கு பெறுகிறார்களோ அவர்கள் அணியில் சேருவார்கள். ஆனால், சத்தமில்லாமல் திரைமறைவில் தங்கள் அணிக்கான ஆதரவை மாவட்டச் செயலாளர்கள் திரட்டிக் கொண்டிருக்கின்றனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.