கூடலூர்: பாலம் பணியில் தொய்வு; அதிகாலையில் கவிழந்த அரசுப் பேருந்து – 20 பேர் காயம், ஒருவர் பலி!

தேனி மாவட்டம், கூடலூர் நகர்ப் பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் கூடலூர் அரசு மருத்துவமனை அருகே புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதேபோல கூடலூர் நகர்ப் பகுதிகளில் மட்டும் 4 பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. சாலை விரிவாக்கம் செய்வதற்காக இந்தப் பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

கவிழ்ந்த பஸ்

இதனால் வாகனங்கள் ஒரு வழித்தடத்தில் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்டத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், சாலையோரங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாலங்கள் அமைக்கப்பட்டு வரும் பகுதிகளில் மண் சரிவு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை காலை 5 மணி அளவில் கோயம்புத்தூரிலிருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தப் பேருந்தை ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பழனிசாமி(50) இயங்கி வந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மீட்பு

கூடலூர் அரசு மருத்துவமனை அருகே சாலையோரத்தில் மண் சரிந்து இருப்பதை அதிகாலை நேரத்தில் கவனிக்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநரால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பேருந்து கவிழ்ந்த உடன் அருகில் கூடலூர் காவல் நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தப் பேருந்தில் 25-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் அனைவரும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் கூடலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க மாயி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் முதலுதவி அளிக்கப்பட்டு 5 பேருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து கூடலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்

கூடலூர் பகுதியில் பாலப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்துவருவதால் தொடர்ச்சியாக விபத்துகள் நடந்து வருகின்றன. பாலப்பணிகள் நடக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகையோ, எதிரொலிக்கும் பதாகைகளோ வைக்கப்படவில்லை. பணி முடியும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.