சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் திருப்பு முனையான ’க்ளூ’.. துப்புத் துலங்கியது எப்படி?

கொலையாளிகள் பயன்படுத்திய காரிலிருந்து மீட்கப்பட்ட எரிபொருள் நிரப்பிய ரசீதை வைத்து விசாரித்ததில் கிடைத்த சிறு துரும்பை அப்படியே நூல்பிடித்து சங்கிலி தொடராக இருந்தவர்களை கண்டுபிடித்தனர்.

பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகரான சித்து மூஸ் வாலா, கடந்த மே 29 ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சதி திட்டம் தீட்டி சித்து மூசேவாலாவை கொலை செய்தது தெரியவந்தது. சித்து கொலையில் பிரதான குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்புத் துலங்கியது எப்படி?

சித்து மூஸ் வாலா கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அம்மாநில அரசு நியமித்திருந்தது. இந்த குழு விசாரணையைத் தீவிரப்படுத்தி குற்றவாளிகளை தேடிவந்தது. கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு முதலில் பெரும் சவாலாக இருந்தது. ஆனால் படிப்படியாக அவர்களுக்கு துப்புத் துலங்கியது. இதில் குற்றவாளிகள் பயன்படுத்திய காரிலிருந்து மீட்கப்பட்ட பெட்ரோல் நிரப்பிய ரசீதை வைத்து விசாரித்ததில் கிடைத்த சிறு துரும்பை அப்படியே நூல்பிடித்து சங்கிலி தொடராக இருந்தவர்களை கண்டுபிடித்தனர்.

கொலையாளிகள் பயன்படுத்திச் சென்ற பொலிரோ காரை சாலை ஓரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர். அந்த காரில் இருந்து துப்பாக்கிச்சூடு நடந்த 4 நாட்களுக்கு முன்னதாக காருக்கு எரிபொருள் நிரப்பிய ரசீது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஃபதேஹாபாத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்ற போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் ஹரியாணா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்த ப்ரியவர்த் ஃபவுஜி என்பவர் சித்து மூஸ் வாலாவின் படுகொலையில் தொடர்புடையவராக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

image
இந்த கொலை தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு சதித்திட்டம் தீட்டியது, ஆயுத உதவிகள் வழங்கியது, கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைதாகி உள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  மேலும், சித்து மூஸ் வாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 4 பேரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

சித்து மூஸ் வாலா கொலையில் முக்கிய குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் ஏற்கனவே வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவரை கைது செய்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: மசாஜ் செய்ய மறுத்த பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு – வெளியான சிசிடிவி காட்சிகள்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.