இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது அவர், ‘கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெறாததால் ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவை புதிய அக்னிபத் திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளது.
இளைஞர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டே, அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பு 21 இல் இருந்து 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே நமது இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்’ என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் அவர், பஹல்காமில் உள்ள ஜவஹர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மவுன்டெய்னரிங் மற்றும் விண்டர் ஸ்போர்ட்சின் நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மலையேற்றம் என்பது உடல் சகிப்புத்தன்மையை அதிகரிப்பதுடன், மனஉறுதியையும், உற்சாகத்தையும் தருகிறது. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த துறைகளில் தற்போது பெண்களும் ஆர்வமுடன் ஈடுபடுவது பாராட்டத்தக்கது’ என்று ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறினார்.