திருவண்ணாமலை: ”அதிமுகவின் ஒற்றைத் தலைமையே, பொதுச் செயலாளரே வருக வருக” என அக்கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் பேனர்களை வைத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஒற்றைத் தலைமை முழக்கம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் கூட்டம் நடத்தி உள்ளனர்.
மேலும், ஒற்றைத் தலைமை மற்றும் பொதுச் செயலாளர் பதவி குறித்து, ஆதங்கத்துடன் தனது முடிவை பன்னீர்செல்வம் நேற்று தெரிவித்துள்ளார். இதனால், அதிமுகவில் சலசலப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இன்று (17-ம் தேதி) நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் அதிமுக இணை ஒருக்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி கலந்துகொண்டார்.
இதற்காக சேலத்தில் இருந்து வருகை தந்த அவரை வரவேற்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்துள்ளனர். அதில், ”எங்களின் ஒற்றைத் தலைமையே வருக வருக மற்றும் பொதுச் செயலாளரே வருக வருக” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான பேனர்களில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுகவினர் கூறும்போது, ”ஒற்றைத் தலைமை இல்லாததால், தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை. இதனால் கடந்த தேர்தல்களில் பின்னடைவு ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியபடி, 100 ஆண்டுகள் அதிமுக நிலைத்து இருக்க வேண்டும் என்றால், ஒற்றைத் தலைமை அவசியம். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில், இதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு பழனிசாமிக்கு இருப்பதால், அவர் தலைமையில் அதிமுக வழி நடத்தப்படலாம்” என்றனர். மேலும், பழனிசாமியை வரவேற்றபோது, ஒற்றைத் தலைமையே மற்றும் பொதுச் செயலாளரே என கட்சியினர் முழக்கமிட்டனர். இதனால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
“மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக” – திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசும்போது, ”அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதால், ஏழை மாணவர்கள் பலர் மருத்துவம் படித்து வருகின்றனர்.
தரமான சாலையை அமைத்து கொடுத்தது அதிமுக அரசு. வேளாண்மை துறை செழிக்க வேண்டும், நிலத்தடி நீர் உயர வேண்டும் என்பதற்காக, குடிமராமத்து பணிகள் மூலமாக ஏரி, குளம், குட்டைகளை தூர் வாரப்பட்டது. தடுப்பணைகள் கட்டப்பட்டதால், மழைக் காலங்களில் நீரை தேக்கி, நிலத்தடி நீர் உயர்வுக்கு காரணமாக உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் முதலில் ஆயிரம் ரூபாய், கரும்பு கொடுத்தோம். அடுத்தது ரூ.2,500 கொடுத்தோம். ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பில் திமுக அரசு கொள்ளை அடித்துள்ளது. மக்களுக்கு சரியான முறையில் பொங்கல் பரிசு வழங்கவில்லை. மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது. பொங்கல் பரிசு கூட முறையாக கொடுக்க தெரியாத திறமையற்ற அரசாங்கம், திமுக அரசாங்கம். பல்வேறு துறைகளில் முறைகேடு நடைபெற்று வருகிறது. திமுக அரசங்காத்தால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளனர். அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்றார்கள். ஆனால் கொடுக்கவில்லை. நகைக்கடன் தள்ளுபடியில் மக்களை ஏமாற்றினர். முதியோர் உதவித் தொகையை தடையின்றி வழங்கவில்லை என்றால், முதியோர்களை திரட்டி, அதிமுக போராட்டம் நடத்தும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாமல், அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றி உள்ளது. மக்களை ஏமாற்றி, திமுக இரட்டை வேடம் போடுகிறது. விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்” என்றார்.